சீமானைப் பார்க்கச் சென்ற நடிகர் மன்சூர் அலிகான் சிறையில் அடைப்பு 

நடிகர் மன்சூர்அலிகான்

பிரதமர் நரேந்திரமோடிக்கு கறுப்புக்கொடி காட்டியது தொடர்பாக சீமான் கைதுசெய்யப்பட்டார். அவரை சிறையில் அடைக்கப்போவதாக வெளியான தகவலையடுத்து, போலீஸாரிடம் வாக்குவாதம்செய்த நடிகர் மன்சூர்அலிகான் உள்பட 18 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். 

சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திரமோடிக்கு கறுப்புக்கொடி காட்டிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ., தனியரசு எம்.எல்.ஏ உட்பட பலரை போலீஸார் கைதுசெய்து பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்திருந்தனர். ஏற்கெனவே, சென்னை அண்ணாசாலையில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவலர் ஜெயசந்திரன், நாம் தமிழர் கட்சியினரால் தாக்கப்பட்டார். இதுதொடர்பான புகாரில் சீமான், நாம் தமிழர் கட்சியினர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 10 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் சீமான் கைது செய்யப்படவில்லை. 

 இந்த நிலையில், பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டியது தொடர்பாக சீமானை கைதுசெய்த போலீஸார், அவரை நள்ளிரவில் சிறையில் அடைக்கப்போவதாகத் தகவல் வெளியானது. இதனால், பல்லாவரம் திருமண மண்டபம் முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். நடிகர் மன்சூர்அலிகானும் அங்கு வந்தார். அப்போது போலீஸாருக்கும் மன்சூர்அலிகான் மற்றும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து , நடிகர் மன்சூர்அலிகான் உள்பட 18 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக தொண்டர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களைப் போலீஸார் சமரசப்படுத்தினர்,.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பல்லாவரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான் உட்பட நாம் தமிழர் கட்சியினர், மனித நேய ஜனநாயகக் கட்சியினர் என 18 பேர் மீது  ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். இன்று அதிகாலையில் நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் மனிதநேய ஜனநாயகப் பொருளாளர் ஆரூண் ரஷீத் உட்பட 18 பேரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!