ஏப்ரல் 26-ம் தேதி தஞ்சை தேர்த்திருவிழா : இப்போதே தொடங்கிவிட்டது கோலாகல கொண்டாட்டம் | thanjavur big temple car festival

வெளியிடப்பட்ட நேரம்: 13:46 (13/04/2018)

கடைசி தொடர்பு:13:46 (13/04/2018)

ஏப்ரல் 26-ம் தேதி தஞ்சை தேர்த்திருவிழா : இப்போதே தொடங்கிவிட்டது கோலாகல கொண்டாட்டம்

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் நடத்தப்படும் தஞ்சைப் பெரியகோயில் தேர்த்திருவிழா, இந்த ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற உள்ளது. தஞ்சை மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆகியவை இதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றன.

2015-ம் ஆண்டுக்கு முன்பு வரை தஞ்சைப் பெரியகோயிலின் மிக முக்கியமான பெரிய விழாவாக சதய விழா மட்டுமே இருந்துவந்தது. ராஜராஜ சோழன் பிறந்த சதய நட்சத்திர நாளை முன்னிட்டு, ஆண்டுதோறும் இரண்டு நாள்களுக்கு பெரியகோயில் கோலாகல கொண்டாட்டத்துடன் காணப்படுவதுண்டு. இது தவிர, பங்குனி உத்திரம், பிரதோஷம் போன்ற நாள்களில் சிறிய அளவில் விழாக்கள் நடைபெறும்.

இந்நிலையில்தான், கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக ஓடாமல் நின்ற தஞ்சைப் பெரியகோயில் தேர், 2015-ம் ஆண்டு பல லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு, சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாகத் தேர்த்திருவிழா கொண்டாட்டம் தொடங்கப்பட்டது. உலகப் புகழ்பெற்றது பெரியகோயில் தேர் என்பதால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இதை ஆர்வத்துடன் கண்டுகளிக்க வருகிறார்கள்.

இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று மாலை சிம்ம வாகனத்திலும், நாளை மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர் வீதிஉலாவும் நடைபெறுகிறது. 15-ம் தேதி, மேஷ வாகனத்தில் சுப்ரமணியர் வீதி உலா நடைபெறும். இதுபோல,அடுத்தடுத்த நாள்களில் விழா தொடர்கிறது. தஞ்சை மக்களை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும் தேர்த்திருவிழா, 26-ம் தேதி நடைபெற உள்ளது. அதிகாலை 5.40 மணிக்கு வடம் இழுக்கப்படும் தேர், நான்கு வீதிகளிலும் உலா வரும்போது தஞ்சை நகரில் மக்கள் வெள்ளம் கட்டுக்கடங்காது.