`பாரதிராஜாவிடம் கேட்டுவிட்டு ரஜினி ட்வீட் போட்டிருக்க வேண்டும்!' - சேப்பாக்கம் தாக்குதல் பின்னணியை விவரிக்கும் சீமான் | Rajini should have consulted with bharathiRaja before tweeting, slams Seeman 

வெளியிடப்பட்ட நேரம்: 12:59 (13/04/2018)

கடைசி தொடர்பு:13:56 (13/04/2018)

`பாரதிராஜாவிடம் கேட்டுவிட்டு ரஜினி ட்வீட் போட்டிருக்க வேண்டும்!' - சேப்பாக்கம் தாக்குதல் பின்னணியை விவரிக்கும் சீமான்

`மோடி படத்தைப் போட்டுக்கொண்டு, பா.ஜ.கவினர் காவல்துறையைத் தாக்கும் காட்சிப் படங்கள் எங்களிடம் உள்ளன. ரஜினி ட்வீட் இதற்கும் பொருந்துமா?' எனக் கேள்வி எழுப்புகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

`பாரதிராஜாவிடம் கேட்டுவிட்டு ரஜினி ட்வீட் போட்டிருக்க வேண்டும்!' - சேப்பாக்கம் தாக்குதல் பின்னணியை விவரிக்கும் சீமான்

சீமான்

சேப்பாக்கம் மைதானம் முற்றுகைப் போராட்டத்தில் காவல்துறையைத் தாக்கியதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொலை முயற்சி உள்பட பத்து பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நேற்று பல்லாவரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சீமானைப் போலீஸார் கைது செய்ய இருப்பதாகத் தகவல் வெளியானது. `சீமானைக் கைது செய்யக் கூடாது' என்ற முழக்கங்களும் எழத் தொடங்கியுள்ளன. 

சீமானிடம் பேசினோம். 

உங்களைக் கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டுவதாகத் தகவல் வருகிறதே?

``இது எங்கே தொடங்குகிறது எனப் பார்க்க வேண்டும். நாங்கள் ஒரு பொதுப் பிரச்னைக்காகப் போராடுகிறோம். அது காவலர்களுக்கும் சேர்த்துத்தான். விளையாட்டைப் பார்த்து நாங்கள் எரிச்சலடைய ஏதுமில்லை. போராட்டத்தின் தீவிரத்தைப் பார்த்துத்தான், `போட்டிகளை நடத்தக் கூடாது' என்ற கோரிக்கையை வைத்தோம். அதற்கு முன்னதாக ரயில் மறியல், ஆர்ப்பாட்டம் எனப் பல போராட்டங்கள் செய்துவிட்டோம். தீக்குளிப்பு கூட நடந்ததே. இந்த அரசாங்கம் எதற்கும் செவிமடுப்பதாகவே தெரியவில்லை. எதுவும் நடக்கவில்லை. விளையாட்டு என வந்தவுடன் அவர்களுக்குப் பதற்றம் வந்துவிட்டது. ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்ப்பதற்காகத்தான் விளையாட்டின்மீது கை வைத்தோம். இந்தப் போராட்டத்தில் பாரதிராஜா, வைரமுத்து, வெற்றிமாறன், களஞ்சியம் என அனைவரும் சமூகநோக்குடன்தான் வந்தார்கள். எங்கள் அரசியல் இயக்கம் தொடங்கி ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. எங்காவது விதிமுறைகளை மீறியிருக்கிறோமா எனப் பாருங்கள்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போதுகூட, `நாம் தமிழர் பேரணி போல நடத்துங்கள்' எனக் காவல்துறை அதிகாரிகளே கூறும் அளவுக்கு நாங்கள் கட்டுக்கோப்பாகச் செயல்பட்டு வருகிறோம். சேப்பாக்கம் போராட்டத்தின்போது, எங்களிடம் ஒன்று சொல்லிவிட்டு, வேறு மாதிரி காவல்துறை நடந்துகொண்டது. வெற்றிமாறன், களஞ்சியம், களவாணியில் நடித்த திருமுருகன் உள்ளிட்டவர்கள் மீது பெரிய தாக்குதலை நடத்திவிட்டார்கள். அதுவும் குறிப்பாகப் பெண்கள் மீது தாக்குதல் நடத்தி, காயத்தை ஏற்படுத்தியுள்ளனர். களஞ்சியத்தின் ஆதரவாளர் ஒருவருக்கு விலா எலும்பு முறிந்துவிட்டது. அந்த இடத்தில் நான் நடந்துபோகும்போது, ஒரு கூட்டம் சிதறி ஓடிவந்தது. நான் போலீஸிடம் சென்று, `ஏன் தாக்குதல் நடத்துகிறீர்கள்...அடிக்காதீர்கள்' எனத் தடுத்தேன். விலக்கிவிடத்தான் நான் சென்றேன்". 

விலக்கிவிட்டதற்காகத்தான் உங்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதியப்பட்டதா? 

``ஆமாம். அது எதற்காகப் போடப்பட்டது என்று எனக்கே தெரியவில்லை. சில அழுத்தங்களின் விளைவாகத்தான் என் மீது வழக்குப் பதிந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக ரஜினி ட்வீட் போட்டார்". 

ரஜினியின் ட்வீட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

`` அவருக்கு இது அவசியமில்லை. நாங்கள் வன்முறையோடு எங்கு நடந்து கொண்டோம்.. மோடி படத்தைப் போட்டுக் கொண்டு, பா.ஜ.க-வினர் காவல்துறையைத் தாக்கும் காட்சிப் படங்கள் எங்களிடம் உள்ளன. ரஜினி ட்வீட் இதற்கும் பொருந்துமா? கர்நாடகாவில் எத்தனை  பேருந்துகள் எரிக்கப்பட்டன.. எத்தனை ஓட்டுநர்கள் அரைநிர்வாணப்படுத்தப்பட்டனர்... அங்கிருந்து தமிழர்கள் நடந்தே வந்த காட்சிகள் எல்லாம் நடந்தன. இதற்கெல்லாம் ரஜினி எதுவுமே பேசவில்லை. போக்குவரத்துக் காவலர்களால் உஷா என்ற பெண்மணி இறந்தது குறித்துக் கேட்டபோது, கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு இமயமலைக்குச் சென்றவர்தான் இவர். என்ன நடந்தது என்றே தெரியாமல் ட்வீட் போடுகிறார். அந்த வீடியோவில் என்னைப் பார்த்ததும் உடனே ட்வீட் போட்டுவிட்டார். இதில் நான் தாக்கிய காட்சிகள் எங்காவது இருக்கிறதா...பிறகு எப்படிக் கொலை முயற்சி வழக்கு வரும்?"  

ரஜினி

உங்களுக்கு எதிராக இந்தச் சம்பவத்தை ரஜினி பயன்படுத்திக் கொண்டார் என்கிறீர்களா? 

``ஆமாம். அப்படித்தான் பார்க்கிறோம். நான் இதுவரையில் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவர் எந்தப் பதிலும் கூறியதில்லை. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் சட்டம் கொண்டு வந்தபிறகும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறை தாக்கியது ஏன்.. அந்தநேரத்தில் வீடுகளைத் தீக்கிரையாக்கியதைப் பற்றி இவர் ஏதாவது பேசியிருக்கிறாரா... காவலர்களே தீ வைத்ததற்கான காணொளிகள் வெளியானதே...மக்களைக் காப்பதுதான் காவல்துறையின் வேலை. தாக்குவது அல்ல. போலீஸ்காரர்களை அடிப்பதற்காக நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. அங்கே தாக்குதல் நடத்தியது என் கட்சிக்காரன் அல்ல. அவன் நிச்சயம் என் கட்சிக்காரனாக இருக்க முடியாது. என் தொண்டர்களை நான் அப்படி வளர்க்கவில்லை. அப்படி என் கட்சிக்காரராக இருந்தால் தண்டியுங்கள். அன்று பல அமைப்புகள் இணைந்து போராட்டம் நடத்தின. நாம் தமிழர் கட்சி எனத் தொலைக்காட்சி கூறிவிட்டால், அது உண்மையாகிவிடுமா? தோனி ரசிகரை நாங்கள் தாக்கினோம் என்றார்கள். அந்த ரசிகர் என்னிடமே, `சீமான் சார்..நீங்க தப்புப் பண்ணீட்டீங்க. என்னை அடிச்சுட்டாங்க' எனப் பேசினார். அதன்பிறகு, `கருணாஸ் கட்சிக்காரங்கதான் அடிச்சாங்க. தெரியாமச் சொல்லிட்டேன்' என்றார். அவர் கூறியதை வைத்து என்னைக் கைது செய்வீர்களா.. உங்களிடம் உள்ள உளவுப்படைகளை வைத்தே நடந்த சம்பவத்தை ஆய்வு செய்யுங்கள்". 

உங்கள் மீது வழக்குப் போடப்பட்டதன் பின்னணி என்ன? 

``மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாகத்தான் வழக்குப் போட்டிருக்கிறார்கள். மத்திய அரசு சொல்லாமல் இந்த அரசு செய்யாது. ரஜினியும் ட்வீட் போட்டிருக்க மாட்டார். போராடச் சென்றவர்கள் என்ன பொறுக்கிகளா... நாங்கள் ஒரு பொதுப் பிரச்னைக்காகக் கூடுகிறோம். அங்கு வந்தவர்கள் அனைவரும் பொறுப்புள்ள பணியில் இருப்பவர்கள். தன்னுடைய நண்பர் என ரஜினி சொல்லும் பாரதிராஜாவிடம் கேட்டுவிட்டு ட்வீட் போட்டிருக்க வேண்டியதுதானே.."

நேற்று உங்களைக் கைது செய்ய உள்ளதாகத் தகவல் பரவியதே? 

``என்னை வன்முறையாளனாகச் சித்திரிக்கப் பார்க்கிறார்கள். எத்தனை கலவரத்தை நாங்கள் செய்திருக்கிறோம்... நாங்கள் குற்றமற்றவர்கள். சட்டம் எங்களை விடுதலை செய்யும். இதற்கு முன்னால் என் மீது போடப்பட்ட வழக்குகளில் சட்டரீதியாக வெற்றி பெற்றிருக்கிறேன். உயர்ந்தநோக்கத்தோடு களத்தில் நிற்பவர்களை அடக்குமுறை எதையும் செய்துவிடாது. காலையில் ஒரு போராட்டம், மாலையில் ஒரு போராட்டம். வீட்டுக்குப் போவோமா இல்லையா என்பது நிச்சயமில்லை. கிரிக்கெட் அரங்கில் உட்கார்ந்து பார்த்தவர்களுக்கும் சேர்த்துத்தான் நாங்கள் போராடுகிறோம். காவலர்களை யார் தாக்கியிருந்தாலும் தவறுதான். அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும். நாங்கள் நடத்திய போராட்டத்தில் இப்படி நடந்ததுதான் மிகுந்த மனவலியைக் கொடுத்தது. சாரங்கன் என்ற ஐ.பி.எஸ் அதிகாரியிடம், `எங்களை ஏன் அடிக்கிறீர்கள்?' எனக் கேட்டேன். `பேரிகார்டைத் தள்ளிவிட்டார்கள்' என்றார். `பேரிகார்டுக்காக இப்படியொரு தாக்குதலா?' என ஆதங்கப்பட்டேன். போலீஸோடு போராடுவதற்கா போராட்டங்களை முன்னெடுத்தோம்?" 

ஐ.பி.எல் போட்டிகளை இடமாற்றம் செய்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

``அது எங்கள் இலக்கல்ல. மறுக்கப்பட்ட நதிநீர் உரிமையைப் பெறுவதுதான் எங்கள் இலக்கு. நமக்கு வேண்டியது நீரும் சோறும்தான். ஸ்கோர் அல்ல. இவ்வளவு எதிர்ப்பைக் காட்டியும் தமிழ்நாட்டுக்குள் வந்த பிரதமர், வாய்திறக்கவே இல்லையே...முதல்வரும் துணை முதல்வரும் ஒப்புக்காகப் பிரதமரிடம் மனுகொடுத்தார்கள். இதற்குப் பிரதமர் கூறிய பதில் என்ன.. தமிழ் மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைக்கு மோடியின் பதில் என்ன?"


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close