சென்னையில் புதுப்பெண்ணுக்கு காதலனால் நேர்ந்த கொடூரம்!

பாலியல் குற்றம்

சென்னை அம்பத்தூரில் புதுப்பெண்ணை வீட்டுக்குள் புகுந்து தாக்கிய காதலனை போலீஸார் கைதுசெய்துள்ளனர். 

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் நிகிதா (பெயர் மாற்றம்). இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இந்தநிலையில் இவரது வீட்டுக்குள் புகுந்த வாலிபர், நிகிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பிறகு, அவரைத் தாக்கியுள்ளார். இதையடுத்து நிகிதாவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 
நிகிதா தரப்பில் அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்தி நவீன் என்பவரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "நிகிதாவும் நவீனும் ஒரே கல்லூரியில் பயின்றுள்ளனர். அப்போது இருவரும் பழகியுள்ளனர். நவீன், நிகிதாவை  காதலித்துள்ளார். இந்தச் சமயத்தில்தான் நிகிதாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன. அதை நவீனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடுத்த மாதம் நிகிதாவுக்கு திருமணம் நடக்கவுள்ளது. இதையறிந்த நவீன், சம்பவத்தன்று டூவிலரில் நிகிதா வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு தகராறு செய்துள்ளார். ஆத்திரத்தில் வீட்டில் உள்ள பொருள்களைச் சூறையாடியுள்ளார். பிறகு நிகிதாவையும் தாக்கியுள்ளார். இதனால், நவீனை கைது செய்துள்ளோம். நவீன், பிஹெச். டி படித்துவருகிறார்" என்றனர். 

 போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "நவீனைப் பிடித்ததும் காவல்துறை மேலதிகாரிகளிடமிருந்து எங்களுக்கு பிரஷர் வந்தது. ஏனெனில் நவீனின் குடும்பத்தினரும் காவல்துறையில் பணியாற்றியுள்ளனர். இருப்பினும் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். நவீனிடம் விசாரித்தபோது, நிகிதாவும் தன்னுடன் பழகினார் என்று தெரிவித்தார்.  நிகிதாவிடம் விசாரித்தபோது அதை அவர் மறுத்தார். இருப்பினும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பொருள்களை அடித்து நொறுக்கியதோடு புதுப்பெண்ணையும் தாக்கியதால் நவீனை கைதுசெய்துள்ளோம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!