வெளியிடப்பட்ட நேரம்: 15:07 (13/04/2018)

கடைசி தொடர்பு:19:41 (13/04/2018)

"வாழத் தகுதியற்ற பூமியானது தமிழ்நாடு!" - 'திகில்' கிளப்பும் ராணுவ மண்டல பின்னணி

``தமிழகத்தில் உள்ள பெரும்பாலான விளைநிலங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு, அந்தப் பகுதியை வாழத் தகுதியற்றதாக மாற்றுவதே ராணுவ மண்டலம் அமைக்கும் திட்டத்தின் நோக்கம் எனலாம்... மத்திய அரசின் அந்தத் திட்டம் இப்போது நிறைவேறி விட்டது. தமிழகத்தில் இனி எஞ்சியிருக்கும் விளைநிலங்களையும் விஷ நிலங்களாய் மாற்ற வேண்டியது மட்டும்தான் பாக்கி..." என்று அதிர்ச்சியைக் கொட்டுகிறார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன்.

அவரிடம் பேசியபோது, ``காவிரி உரிமைக்காக, தமிழ்நாடே கொந்தளித்துக்கொண்டிருக்கும் வேளையில், `டிஃபென்ஸ் எக்ஸ்போ-வை', இங்கே நடத்த வேண்டிய தேவை என்ன? காவிரியில் தண்ணீர் வராததற்கும் இந்த `டிஃபென்ஸ் எக்ஸ்போ'-வுக்கும் இடையேயான தொடர்பை நாம் சந்தேகத்துடன்தான் அணுக வேண்டியிருக்கிறது. தமிழகத்தை ராணுவ மண்டலமாக (மிலிட்டரி-டிபென்ஸ் ஸோன்) மாற்றும் முயற்சியில் மத்திய அரசு வேகமாக முன்னேறி வருவதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

ராணுவ மண்டலம்

சில மாதங்களுக்கு முன் வெளியான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் `தமிழகத்தில், ராணுவ வழித்தட மண்டலம் (Defence corridor) அமைக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டது. `ஓசூரில் தொடங்கி கோவை, திருச்சி, ஆவடி, கல்பாக்கம் ஆகிய ஊர்களை இணைத்து காட்டுப்பள்ளித் துறைமுகத்தில், ராணுவ மண்டலம் முடியும்' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவித்த ஒரு மாதத்திற்குள்ளாக, தற்போது டிஃபென்ஸ் எக்ஸ்போ-வை மத்திய அரசு, திருவிடந்தையில் நடத்தியுள்ளது.

பாதுகாப்பு தொடர்பான வளாகத்தில், மின்உற்பத்தி நிலையம் என்று சொல்லப்பட்ட கல்பாக்கம் ஏன் இணைக்கப்பட்டது என்ற கேள்வியை முன்னரே எழுப்பினோம். இந்தியாவின் அணுகுண்டு தயாரிப்புத் திட்டத்தில் கல்பாக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது இதன்மூலம் தெள்ளத்தெளிவாகத் தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டின் பல பகுதிகளை வாழத் தகுதியற்ற பிரதேசமாக மாற்ற வேண்டும் என்ற திட்டம் மத்திய அரசிடம் இருப்பதுபோல் உள்ளது. அதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று பூமிக்குக் கீழ் இருக்கும் வளம்; இரண்டாவது முன்னரே சொன்ன பாதுகாப்பு மண்டலம். தமிழகத்தின் உணவுதானிய உற்பத்தியில் முக்கியப் பங்குவகிப்பது டெல்டா மாவட்டங்கள். ஆனால், பாண்டிச்சேரியின் பாகூர் முதல் ராமநாதபுரம் வரை 135 ஆண்டுகளுக்கு எடுக்கக்கூடிய நிலக்கரி படிமங்கள் உள்ளன. இதை நாம் பல்வேறு தரவுகளின் மூலம் அறிந்துகொள்ள முடியும். மண்வளம் மிக்க இந்தப் பகுதியில்தான் தமிழகத்தின் கிட்டத்தட்ட 40% உணவு உற்பத்தி நடைபெறுகிறது. நிலக்கரி எடுப்பதற்கு திறந்தவெளி சுரங்கங்கள் அமைக்கப்பட வேண்டும். அப்படியென்றால் மக்கள் அதிகமாக அந்தப் பகுதியில் வாழக் கூடாது. அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரமாக இருப்பது விவசாயம். விவசாயத்துக்குத் தேவையான நீர் இரண்டு வழிகளில் கிடைக்கும். ஒன்று ஆற்று நீர்; மற்றொன்று நிலத்தடி நீர். ஆறு என்பது இங்கே காவிரி சுந்தரராஜன்ஆறு. அந்த நீரைக் கிடைக்காமல் செய்வதன் மூலம் விவசாயம் படிப்படியாகக் குறைந்து, மக்கள் அந்தப் பகுதிகளை விட்டு வெளியேறுவார்கள். இன்னொருபுறம் நிலத்தடி நீரை மாசுபடுத்தவே ஹைட்ரோ கார்பன் திட்டம் இருக்கிறது. அடுத்த 25 முதல் 30 ஆண்டுகளுக்குள் இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் மக்கள் படிப்படியாக விவசாயத்தை தவிர்த்துப் பிழைப்பு தேடி பெருநகரங்களை நோக்கி இடம்பெயர்வார்கள். அதன் பிறகு அவர்களின் நிலக்கரி வேட்டையைத் தொடங்கலாம் என்பது மத்திய அரசின் நீண்டகாலத் திட்டம். அதேபோல் மத்திய அரசின் பாதுகாப்புத் தொடர்பான திட்டங்களைத் தமிழகத்தில் மட்டும் குவிப்பதற்காக, குறிப்பிட்ட இடங்களிலிருந்து மக்களை வெளியேற்றும் செயல்களும் தொடங்கியுள்ளன. 

நியூட்ரினோ, சாகர்மாலா, பாதுகாப்பு காரிடார் எனத் திட்டங்களை இங்கே நிறுவி தமிழகத்தை ராணுவ மண்டலமாக மாற்றுவதற்கு முக்கியக் காரணமும் உள்ளது. இந்தியாவின் எதிரி நாடுகளாகக் கருதப்படும் சீனா மற்றும் பாகிஸ்தானிலிருந்து அதிக தூரத்தில் இருக்கும் பிரதேசம் தமிழகம்...அதனால் பாதுகாப்புத் தொடர்பான கட்டமைப்புகளை இங்கே உருவாக்குவது `பாதுகாப்பானது' என அரசு நினைக்கிறது. மேற்சொன்னவற்றை நாங்கள் போகிறபோக்கில் சொல்லவில்லை, நடைபெறக் கூடிய சம்பவங்களை வைத்துதான் சொல்கிறோம். உடனே, நாங்கள் பீதியைக் கிளப்புகிறோம் என்று சில முற்போக்கு விஞ்ஞானிகளும், அறிவியல் ஆலோசகர்களும், சமூக ஊடக ஆர்வலர்களும் எழுதவும் பேசவும் கூடும். ஒன்றுக்கு மூன்றுமுறை தெளிவாகச் சொல்கிறோம். இது சந்தேகம்தான். எங்களின் கருத்தை இல்லை என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு மத்திய-மாநில அரசுகளுக்கு உள்ளது. இன்னொரு விஷயம், தமிழகத்துக்கு அருகிலிருக்கும் ஹம்பன் தோட்டாவில் சீனர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள மறந்து விட்டார்கள்" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்