வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (13/04/2018)

கடைசி தொடர்பு:15:10 (13/04/2018)

`எப்படியிருக்கிறீர்கள்?’ - இயக்குநர் களஞ்சியத்திடம் நலம் விசாரித்த போலீஸ் கமிஷனர் 

போலீஸ் கமிஷனர்

ஐ.பி.எல் கிரிக்கெட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீஸாரால் தாக்கப்பட்ட சினிமா இயக்குநர் களஞ்சியத்தை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

சென்னை ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை எதிர்த்து அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தைப் போராட்டக்குழுவினர் முற்றுகையிட முயற்சி செய்தனர். இதனால், அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 
 

போலீஸ் தடியடி

போராட்டத்தின்போது போலீஸாருக்கும் போராட்டக்குழுவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீஸார் நடத்திய தடியடியில் சினிமா இயக்குநர் களஞ்சியமும் கரூரைச் சேர்ந்த ரமேஷ் உட்பட சிலர் படுகாயமடைந்தனர். இதில் களஞ்சியம், ரமேஷ் ஆகியோர் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில்தான் நாம் தமிழர் கட்சியினர் தாக்கியதில் காவலர் ஜெயசந்திரன் படுகாயமடைந்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் சீமான்மீது கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 10 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், போலீஸார் தாக்கியதில் காயமடைந்த களஞ்சியத்தை நேரில் சந்தித்து அரசியல் தலைவர்கள் ஆறுதல் கூறிவருகின்றனர். யாருமே எதிர்பாராத வகையில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு களஞ்சியத்தைச் சந்தித்து `எப்படி இருக்கிறீர்கள்' என்று நலம் விசாரித்தார். கமிஷனரின் திடீர் வருகை பரபரப்பை ஏற்படுத்தினாலும் அவரது மனிதநேயத்தை அங்குள்ளவர்கள் பாராட்டினர். அப்போது களஞ்சியத்துடன் இருப்பவர்கள் போராட்டத்தில் என்ன நடந்தது என்று விரிவாகக் கமிஷனரிடம் விளக்கினார்கள். அதைப் பொறுமையாகக் கமிஷனர் கேட்டார். பிறகு உடல் நலத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து கமிஷனர் புறப்பட்டுச் சென்றார்.