வெளியிடப்பட்ட நேரம்: 14:38 (13/04/2018)

கடைசி தொடர்பு:15:02 (13/04/2018)

`நெருப்பாகும்...வெறுப்பு' - பி.ஜே.பி-க்கு எதிராக அஸ்திரம் எடுத்த அ.தி.மு.க.!

`நெருப்பாகும்...வெறுப்பு' - பி.ஜே.பி-க்கு எதிராக அஸ்திரம் எடுத்த அ.தி.மு.க.!

ட்டுமொத்தத் தமிழகமுமே பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டியபோதும், அவருக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தது ஆளும் அ.தி.மு.க. அரசு! ஆனால், மோடிக்கு எதிரான நிலைப்பாட்டை அதே அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான `நமது அம்மா'வில் வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காவிரி விவகாரத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது மத்திய அரசு. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சியினர், தமிழ் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், மறியல், நடை பயணம் எனப் பல்வேறு நிகழ்வுகளை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற பாதுகாப்புத் துறையின் ராணுவக் கண்காட்சியில் கலந்துகொள்ள வியாழன் அன்று தமிழகம் வருகைதந்தார் மோடி. பிரதமரின் இந்தப் பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கறுப்புக் கொடி போராட்டத்தை அறிவித்தனர். அதே நேரம், அ.தி.மு.க அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ``தி.மு.க-வினர் பிரதமருக்குக் கறுப்புக் கொடி காட்டினால், அ.தி.மு.க-வினர் பிரதமருக்குப் பச்சைக் கொடி காட்டுவோம்” என்று கருத்துத் தெரிவித்தார்.

மோடி

பிரதமர் சென்னை வந்திறங்கியது முதல் அவர் டெல்லி புறப்பட்டுச் செல்லும் வரை சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம், கறுப்புப் பலூன்களைப் பறக்கவிடுதல், புறாவின் காலில் கறுப்புக் கொடியைக் கட்டிப் பறக்கவிட்டது என மோடிக்குக் கடும் எதிர்ப்பு நிலவியது. ஆனால், ஆளும் கட்சியான அ.தி.மு.க-வினர் மட்டும் எந்தப் போராட்டமும் செய்யாமல் அமைதிகாத்தனர். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என ஆளும் அ.தி.மு.க-வினர் அனைவரும் பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் உற்சாகமாக வலம் வந்தனர். அ.தி.மு.க-வின் இந்தப் போக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. 

தமிழகம் முழுவதும் மோடிக்கு எதிராகவும், பி.ஜே.பி-க்கு எதிராகவும் எதிர்ப்பு அலை அதிகரித்திருப்பதை மாநில உளவுத்துறை அதிகாரிகள் ஆளும்தரப்பிடம் சொல்லியுள்ளார்கள். இந்தச் சூழ்நிலையில், அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடாக வெளிவரும் `நமது புரட்சித் தலைவி அம்மா' நாளிதழில், மோடிக்கு எதிரான விமர்சனத்தை தாங்கிய கவிதை ஒன்று வெளியாகியுள்ளது.`நெருப்பாகும்.... வெறுப்பு' என்ற தலைப்பில் இந்தக் கவிதை எழுதப்பட்டுள்ளது. இந்தக் கவிதையில், நெடுவாசல் பிரச்னை, நீட் விவகாரம், வர்தா புயலுக்கு நிதி ஒதுக்காதது, தமிழக மீனவர்கள் பிரச்னை, சுப்பிரமணிய சுவாமியின் கருத்து, ஹெச்.ராஜா, தமிழிசையின் பேச்சுக்குக் கண்டனம்... என ஒட்டுமொத்த பி.ஜே.பி-க்கு எதிராகக் கடும் கருத்துகளைப் பதிவு செய்துள்ளது. 

`எது கேட்டு நின்றாலும் இழுத்தடிப்பு...

ஹெச்.ராஜா, தமிழிசை ஏச்சுகளால் எங்கு பார்த்தாலும் ஏகக்கொதிப்பு...' போன்ற வரிகளும், 

`மத்திய அரசு மனப்போக்கை மாற்றுவதே சிறப்பு... இல்லையேல் அது ஒற்றுமை ஒருமைப்பாட்டில் உருவாக்கிவிடுமே வெடிப்பு... இனியாவது புரியட்டும் தாமரைக்கட்சிக்குத் தமிழினத்தின் தன்மானம் குன்றாத வியப்பு...' என்று அந்தக் கவிதை வரிகள் முடிகின்றன. 

நமது அம்மா பத்திரிகையின் ஆசிரியராக இருக்கும் மருது அழகுராஜ்தான் சித்திரகுப்தன் என்ற பெயரில் இந்தக் கவிதையை எழுதியுள்ளார். இந்தப் பத்திரிகையின் நிறுவனர்களாக ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இருந்துவருகிறார்கள். பி.ஜே.பி-க்கு ஆதரவாகவே இதுவரை செயல்பட்டு வந்த அ.தி.மு.க தனது அதிகாரபூர்வ பத்திரிகையின் வாயிலாக பி.ஜே.பி-க்கு எதிராகக் கொந்தளித்திருப்பது அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது. சமீபகாலமாகவே பி.ஜே.பி-யுடன் அ.தி.மு.க தரப்பு மோதல் போக்கைக் கடைபிடிக்க ஆரம்பித்துள்ளது என்று செய்திகள் வந்த நிலையில், பிரதமர் வந்து சென்ற மறுதினமே மத்திய அரசுக்கு எதிராகவும், பி.ஜே.பி. நிர்வாகிகளை வசை பாடியும் அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேட்டில் செய்தி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

அ.தி.மு.க தலைமையின் ஒப்புதலோடுதான் இந்தக் கவிதை வெளியாகியிருப்பதாகச் சொல்கிறார்கள் `நமது அம்மா' பத்திரிகை ஊழியர்கள். ஏற்கெனவே, நமது எம்.ஜி.ஆரில் பி.ஜே.பி-க்கு எதிராகக் கருத்து வெளியிட்டதால், மருது அழகுராஜ் அங்கிருந்து நீக்கப்பட்டார். பின், 'நமது அம்மா ' இதழ் ஆரம்பிக்கப்பட்டபோது ஆசிரியராக இணைந்தார்.   இந்த நிலையில், நமது அம்மா ஆரம்பிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக பி.ஜே.பி-க்கு எதிராகத் துணிச்சலாகக் கருத்து வெளியிட்டுள்ளது நமது அம்மா நாளிதழ். பி.ஜே.பி-க்கு எதிராக அ.தி.மு.க எடுத்திருக்கும் முதல் அஸ்திரம் இது என்கின்றனர் அ.தி.மு.க-வின் முன்னணியினர்! 


டிரெண்டிங் @ விகடன்