வெளியிடப்பட்ட நேரம்: 14:27 (13/04/2018)

கடைசி தொடர்பு:14:55 (13/04/2018)

பிரதமரை விமர்சித்து பாடல்! - பாடகர் கோவன் திடீர் கைது

கோவன்

மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த பாடகர் கோவன் இன்று திருச்சியில் கைது செய்யப்பட்டார்.

மக்கள் பிரச்னைகளை முன்வைத்து ம.க.இ.க மேடைகளில் பாடல்களைப் பாடி வருபவர் திருச்சியைச் சேர்ந்த கோவன். சாதியக் கொடுமைகள், போலீஸ் அடக்குமுறைகள், தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை, மணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளை உட்பட பல சமூகப் பிரச்னைகள் குறித்த விழிப்பு உணர்வுப் பாடல்களை உணர்ச்சிகரமாகப் பாடிவருபவர் இவர்.

இந்நிலையில்,  இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியம் தலைமையில் போலீஸார் கோவனை கைது செய்ய அவரின் வீட்டுக்குச் சென்றனர்.  `எதற்காக இந்தக் கைது நடவடிக்கை’ என்று கோவனின் உறவினர்களும் கிராம மக்களும் போலீஸிடம் கேட்டனர். போலீஸ் பதிலளிக்க மறுத்ததால் மக்களுக்கும் போலீஸுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதையடுத்து கோவனை கைது செய்து திருச்சி கே.கே.நகர் காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். 

ரதயாத்திரைக்கு எதிராகவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கோவன் சமீபத்தில்  பாடல்களைப் பாடினார். பிரதமர் மோடியை விமர்சித்துப் பாடல் பாடியதற்காகத்தான் கோவனை  திருச்சி போலீஸார் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த மார்ச் 28ம் தேதி பா.ஜ.க மாநகர் மாவட்ட இளைஞரணி பிரிவுத் தலைவர் கெளதமன் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோவனுக்கு எதிராக புகார் அளித்திருந்தார். 

கடந்த 2015-ம் ஆண்டு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது `மூடு டாஸ்மாக்கை மூடு’ என்று பாடியதற்காகக் கோவன் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க