`இங்கு வேட்டி சட்டைக்கு அனுமதிக் கிடையாது!' - மாணவர்களைக் கலங்கடித்த பள்ளி நிர்வாகம்

நெல்லையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் வேட்டி அணிந்து பள்ளிக்குச் சென்றுள்ளனர். அவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்காத பள்ளி நிர்வாகம், பெற்றோரை மாற்று உடையுடன் வரவழைத்து கடிந்து கொண்டது.


நெல்லையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் வேட்டி அணிந்து பள்ளிக்குச் சென்றுள்ளனர். அவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்காத பள்ளி நிர்வாகம், பெற்றோரை மாற்று உடையுடன் வரவழைத்து கடிந்துகொண்டது.

வேட்டி சட்டை

Representational Image

நெல்லை வண்ணார்பேட்டையில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் ஒன்பதாவது படிக்கும் மாணவர்கள் 4 பேர், தமிழ்ப் புத்தாண்டை வித்தியாசமான முறையில் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். நாளை பள்ளிக்கு விடுமுறை என்பதால், இன்றே தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாட முடிவு செய்த 4 பேரும் வழக்கமான பள்ளிச் சீருடை அணியாமல் வேட்டி, சட்டையுடன் வந்துள்ளனர்.

பள்ளிக்குள் மாணவர்கள் சிலர் வேட்டியுடன் வந்ததை அறிந்த பள்ளி நிர்வாகம், அவர்களை அழைத்து கண்டித்ததுடன், அந்த மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். சம்பவத்தைக் கேள்விப்பட்டு பதறியடித்து வந்த பெற்றோர் தங்கள் மகன், பள்ளி முதல்வரின் அறையின் முன்பாக நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

பின்னர் பெற்றோரிடம் பேசிய பள்ளி முதல்வர், `எங்கள் பள்ளிக்கென சில விதிமுறைகள் இருக்கின்றன. பள்ளியின் யூனிஃபார்ம் மட்டுமே அணிந்து வகுப்பறைக்குள் அமர முடியுமே தவிர, இது போன்ற பாரம்பர்ய உடைகளுக்கு அனுமதி கிடையாது. அதனால், உங்கள் மகனை வகுப்பறையில் அமர வைக்க வேண்டுமானால் சீருடையுடன் அனுப்புங்கள். அல்லது வீட்டுக்கே அழைத்துச் சென்று விடுங்கள். உங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும்போது, அவர்கள் அணிந்திருக்கும் உடைகள், எடுத்துச் செல்லும் புத்தகங்கள் போன்றவற்றைக் கவனித்து அனுப்பி வையுங்கள்’ எனத் தெரிவித்தார்.

நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்த பெற்றோர், உடனடியாக வீட்டுக்குச் சென்று சீருடையை எடுத்து வந்தார்கள். அந்த உடைகளை அணிந்த பிறகு மாணவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிகப்பட்டனர். இனிமேல் இது போன்ற தவறுகளைச் செய்யக் கூடாது என எச்சரித்த பின்னர் 4 மாணவர்களும் வகுப்பறைக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!