வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (13/04/2018)

கடைசி தொடர்பு:16:20 (13/04/2018)

`40 எம்.பி-க்களின் வீட்டின் முன்பு உட்காருங்கள்' - இளைஞர்களுக்கு பொன்ராஜ் அறைகூவல்

பொன்ராஜ்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கினார். இதில் 30-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள். இதுபற்றி பத்திரிகையாளர்களிடம் பேசிய பொன்ராஜ், ''நதிநீர் பங்கீட்டை அமல்படுத்தக்கூடிய ஓர் அமைப்பு காவிரி மேலாண்மை வாரியம். இந்தக் காவிரி மேலாண்மை வாரியத்தை நீர்த்துப்போகச் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியோடு மத்திய அரசு கைக்கோத்துக்கொண்டு நீர்த்துப் போகக்கூடிய நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.

அதனால்தான் ஸ்கீம், விளக்கம் கேட்பது. ஒரு அரசியல் சாசன சட்ட அங்கீகாரம் பெற்ற காவிரி நதிநீர் தீர்ப்பாயம் கொடுத்த காவிரி மேலாண்மை வாரியத்தை மாற்றலாமா. செயல் திட்டத்தை மாற்றலாமா. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை உள்ளே கொண்டு வரலாமா எனப் பல்வேறு கேள்விகளைக் கேட்கிறது. திருப்பவும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் செயல் திட்டத்தைக் கொடுங்கள் என்கிறது. நதிநீர் பங்கீட்டுத் தீர்ப்பை மாற்றுவதற்கு இவர்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாது. நமக்கு கொடுக்க வேண்டிய பங்கீட்டைக்கூட கொடுக்காமல் இருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ஒரே வழி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிமீது பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

அதன் மூலமே உச்ச நீதிமன்ற நீதிபதியின் வஞ்சகத்தை வெளியே கொண்டு வர முடியும். உச்ச நீதிமன்ற நீதிபதியை மாற்ற முடியும்.  பிரதமருக்கு எதிராகப் போராட்டம், கறுப்புக்கொடி, கையெழுத்து இயக்கம் செய்து பார்த்துவிட்டோம். எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டார்கள். இதற்கு ஒரே வழி நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும். தமிழக எம்.பி-க்கள் அதைச் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் மத்திய அரசுக்கு பயந்துகொண்டிருக்கிறார்கள். அதனால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் மாணவரும், பொதுமக்களும் தமிழ்நாட்டில் உள்ள 40 எம்.பி-க்கள் வீட்டின் முன்பு உட்கார்ந்து போராட்டம் நடத்தினால் மட்டுமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியும். இல்லையென்றால் அமைக்க முடியாது'' என்றார்.