வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (13/04/2018)

கடைசி தொடர்பு:17:20 (13/04/2018)

உயிரைப் பறிக்கும் டிப்பர் லாரிகள்... மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்!

"ஒரு பக்கம் சிமென்ட் ஆலையால் மக்கள் சாகிறார்கள். இன்னொரு பக்கம் சிமென்ட் ஆலைக்கு செல்லும் டிப்பர் லாரிகளால் சாகிறார்கள்" என்று ஆலைகளுக்கு எதிராக மக்களே பலமுறை போராட்டங்கள் நடத்திவிட்டார்கள். எந்தப் புண்ணியமும் இல்லாததால் மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

                                 போராட்டம்

அரியலூர் மாவட்டம், கல்லக்குடி கிராமத்தின் அருகில் தனியார் சிமென்ட் ஆலைகளுக்குச் சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் உள்ளன. இந்தச் சுரங்கங்களிலிருந்து திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மாருதி சிமென்ட் ஆலைக்கு டிப்பர் லாரிகள் மூலம் சுண்ணாம்புக்கல் கிராம சாலைகள் வழியாகக் கொண்டு செல்லப்படுகிறது. குறுகிய சாலையில் டிப்பர் லாரிகள் அதிவேகமாகச் செல்லும்போது விபத்துகள் நடப்பதாகவும் சாலையையொட்டிள்ள பள்ளியில் பயிலும் குழந்தைகள் விபத்துகளால் பாதிக்கப்படுவதால் லாரிகளை இயக்கக் கூடாது எனவும் கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால், கடந்த சில வாரங்களாக லாரிகள் இயக்கப்படாமல் இருந்தன. இந்நிலையில் நேற்று காவல்துறையின் பாதுகாப்புடன் மீண்டும் லாரிகள் இயக்கப்பட்டதால் கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர்.

                               போராட்டம்

இதையடுத்து கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 272 குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பள்ளிகளில் குழந்தைகள் இல்லாமல் வகுப்பறைகள் காலியாக உள்ளது. மேலும், தற்போது ஆண்டுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் பள்ளிக்கு குழந்தைகள் செல்லாததால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கிராமத்துக்குள் லாரி செல்வதைத் தடை செய்ய வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.