வந்தது முன்வாசல்... தப்பியது பின்வாசல் - சென்னை திருமண வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் 

கொள்ளை

 திருமண வீட்டில் 80 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி ஆகியவை கொள்ளையடித்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 சென்னை, பாலவாக்கம் கிழக்குக் கடற்கரை சாலையில் பல்கலை நகர் உள்ளது. இங்கு சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் தங்கராஜு குடியிருந்துவருகிறார். இவரின்  மகனுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துவருகிறது. திருமண ஏற்பாட்டில் வீட்டினர் பிஸியாக இருந்துவருகின்றனர். திருமணத்தையொட்டி வீட்டில் பெயின்ட் மற்றும் மராமத்துப்பணிகள் நடந்தன. இந்தநிலையில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு, தங்கராஜு தன் குடும்பத்தினருடன் திருச்சிக்குச் சென்றுள்ளார். இன்று காலை வீட்டுக்கு வந்த வேலைக்காரப் பெண் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாகப் போன் மூலம் தங்கராஜு க்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர் சென்னை திரும்பினார். இதுகுறித்து நீலாங்கரை போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்தனர். மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வந்தனர். வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. முன்வாசல் வழியாகச் சென்ற மோப்ப நாய், பின்வாசல் வரை ஓடிச் சென்று நின்றது. பின்வாசலில் உள்ள கதவு உடைக்கப்பட்டுள்ளது.

 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "ஓய்வு பெற்ற பேராசிரியர் தங்கராஜு வீட்டிலிருந்து 80 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டின் முன்பக்க கதவை கடப்பாறை கம்பியால் உடைத்து வீட்டுக்குள் சென்ற கொள்ளையர்கள், பீரோவிலிருந்த நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர். அதன்பிறகு, முன்வாசல் வழியாகச் சென்றதால் மாட்டிக்கொள்வோம் என்று கருதிய கொள்ளையர்கள், பின்வாசல் கேட்டின் பூட்டை உடைத்து காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து தப்பியுள்ளனர்.

இந்த வீட்டில் சமீபத்தில் பிளம்பிங், பெயின்ட்டிங் பணிகள் நடந்துள்ளன். இதனால் அந்த வேலைக்கு வந்தவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இருப்பினும் கைதேர்ந்த கொள்ளையர்கள்தான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். சத்தம் வராமல் கடற்பாறையால் கேட்டின் பூட்டை உடைத்துள்ளனர். மேலும், இந்த இடத்தை நீண்ட நாள் நோட்டமிட்டுதான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை நடந்த இடத்தின் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம். அதன் அடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது

கொள்ளை

சென்னை பாலவாக்கம் கடற்கரையில் ஏ.டி.ஜி.பி மகள், காவலர் கார்த்திக்கேயன் ஆகியோருக்கு இடையில் நடந்த வாக்குவாத வீடியோ வைரலானது. அதன்பிறகு எந்த வாகனங்களையும் போலீஸார் ஈ.சி.ஆரில் சோதனை செய்வதில்லை. மேலும், சென்னையில் தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களால் பாதுகாப்புப் பணிக்கு கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள போலீஸார் சென்றுவிட்டனர். இதனால், போலீஸார் ரோந்து பணியில் சரிவர ஈடுபடவில்லை. போலீஸார் இல்லாததால் கொள்ளையர்கள் எளிதில் கைவரிசை காட்டியுள்ளனர். மேலும், கொள்ளை வழக்குகளை விசாரிக்கக்கூட போதிய அளவில் போலீஸார் இல்லை. இதனால்தான் கிழக்கு கடற்கரை பகுதியில் தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் நடந்துவருகின்றன. பாலவாக்கத்தில் நடந்த கொள்ளையைத் தொடர்ந்து கானத்தூர் பகுதியிலும் 10 சவரன் நகை கொள்ளைபோனது. ஆனால், அந்த வீட்டின் உரிமையாளர் போலீஸில் புகார் கொடுக்கவில்லை" என்றனர். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!