சிறப்புக் குழந்தைகளைக் கொண்டாடுங்க... அழைக்கிறது டிஸ்லெக்சியா கஃபே!

சிறப்புக் குழந்தைகளைக் கொண்டாடுங்க...  அழைக்கிறது டிஸ்லெக்சியா கஃபே!

Mnago smudhi
chili chis stiks
Crispee fryd stiks
Non Vejetarian ptalter with grild chkein - இவை தவறாக எழுதப்பட்ட வார்த்தைகள் அல்ல. எழுத்துக் குறைபாடான டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட மெனு கார்டில் இருக்கும் சில உணவு வகைகளின் பெயர்கள். சென்னைக் கோபாலபுரத்தில் அமைந்திருக்கும் ரைட்டர்ஸ் கஃபேவும், மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கமும் இணைந்து, இந்த மாதத்தை டிஸ்லெக்சியா பாதிப்புள்ள குழந்தைகளுக்காகச் சமர்ப்பித்திருக்கிறார்கள். குழந்தைகளைக் கொண்டாட முடிவுசெய்திருக்கும் ரைட்டர்ஸ் கஃபேவில் நுழையும்போதே, நம்மை வரவேற்கிறது அடர்த்தியான காபி டிகாக்‌ஷன் வாசம். 

dyslexia Pc nikhil Vishwanathan

`நார்மல்’ என நாம் வரையறுப்பவர்களைப்போலவே, அறிவும் பல சிறப்புத் திறன்களையும்கொண்ட குழந்தைகள், எழுத்துக் குறைபாட்டால் எத்தகைய அவமானங்களையும் கடினமான சூழலையும் கடந்து செல்கிறார்கள் என்பதைப் பற்றிய உரையாடல்களுடனும் அதைக் களைவதற்கான ஆலோசனைகளுடனும் நடந்துகொண்டிருந்தது பெற்றோர் ஆசிரியர் ஒன்றுகூடல்.  

டிஸ்லெக்ஸியா கஃபே உருவான காரணத்தைப் பேசிய டிஸ்லெக்ஸியா சங்கத் தலைவர் சந்திரசேகர், ``எழுத்துக் குறைபாடு அல்லது கற்றல் குறைபாடான டிஸ்லெக்ஸியா பாதிப்புகொண்டவர்கள், வார்த்தைகளைப் படிப்பதற்கும், எழுத்துகளின் ஓசையைப் புரிந்துகொள்வதற்கும் எதிர்கொள்ளும் சிக்கல்கள் கொஞ்சநஞ்சமல்ல. இத்தகைய குறைபாடுகொண்டவர்களை கையாளத் தெரியாத பொதுச்சமூகம், அவர்களின் முதுகில் அவமான மூட்டையை ஏற்றிவிடுகிறார்கள்.

இயற்கையாகவே ஏற்பட்ட இந்தக் குறைபாட்டுடன் சேர்த்து, சமூகத்தின் புறக்கணிப்பையும் சுமக்கிறார்கள் இவர்கள். இதைக் குறைபாடாகப் பார்த்து அவர்களின் மீது கருணை காட்டத் தேவையில்லை. Chicken என்னும் வார்த்தை நமக்கு இயல்பானது என்றால், chkein என்னும் வார்த்தை அவர்களுக்கு இயல்பானது. தலைகீழானது என நாம் நினைக்கும் வார்த்தைகள், அவர்களுக்கு நேரானது. இந்த விழிப்புஉணர்வை உருவாக்கும் சிறு முயற்சிதான் டிஸ்லெக்ஸியா கஃபே” என்றார்.

dyslexia டிஸ்லெக்சியா Pc nikhil viswanathan

டிஸ்லெக்ஸியா குறைபாடுகொண்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதற்கான சிறப்புப் பயிற்சியாளர்களை நியமித்திருக்கிறது டிஸ்லெக்ஸியா சங்கம். வரும் அனைவருக்கும் கற்றல் குறைபாடுகொண்ட குழந்தைகளின் தேவையையும் சிறப்பையும் புரியவைக்கிறார்கள் இவர்கள்.

தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலரிடம் பேசிய சிறப்புப் பயிற்சியாளர் ஹரிணி மோகன், ``டிஸ்லெக்ஸியா குறைபாடுகொண்ட குழந்தைகள் சிறப்பானவர்கள். அவர்களுக்குத் தேவை சிறப்புக் கவனம் மட்டுமே. அவர்கள் சோம்பேறிகள் அல்ல. நாம் உள்வாங்கிக்கொள்ளும் அதே தகவலை, அறிவை அவர்களாலும் நன்றாக உள்வாங்க முடியும். அறிந்துகொண்டதை வெளிப்படுத்தும்விதமான எழுத்துமுறைதான் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம்.

நாம் செய்யவேண்டியதெல்லாம் எழுதும், படிக்கும் முறையை அவர்களுக்கு ஏற்றவகையில் நேசத்தோடு மாற்றுவதுதான். பல பெற்றோரும் ஆசிரியர்களும் இதன் அடிப்படை புரியாமல் அவர்களது இயலாமையை குழந்தைகளின் மீது வைத்து அழுத்துகிறார்கள். `நார்மல்’ எனச் சொல்லிக்கொள்ளும் நாம்தான், இத்தகைய குழந்தைகளின் சிக்கலைப் புரிந்துகொள்ளாமல், அவர்களைச் சிதைத்துவருகிறோம்” என்றார்.

தமிழ்நாட்டில் இரண்டு மில்லியன் மாணவர்களுக்கு டிஸ்லெக்ஸியா குறைபாடு இருப்பதாகச் சொல்கிறது மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கம். கலை மனம் படைத்தவர்களாகவும் க்ரியேட்டர்களாகவும் அறியப்படும் டிஸ்லெக்ஸியா குழந்தைகளைப் பற்றிப் பேசிய, குழந்தைகள் நலச் சிறப்பு மருத்துவர் சுப்ரமணியன், ``டிஸ்லெக்ஸியா குழந்தைகள், தேர்வில் குறைவான மதிப்பெண்ணைப் பெறுவார்கள். நம்மைப் பொறுத்தவரை எழுதி எழுதித் தள்ளுவதுதான் தேர்வு. இல்லையா!” கொஞ்சம் மௌனமாகி புன்னகைக்கிறார். ``பேப்பரில் தவறாக எழுதினாலும், இந்தக் குழந்தைகள் பதிலை அறிந்திருப்பார்கள். கேள்வித்தாளை வாசித்துக்காட்டினால், சரியான பதில்களைச் சொல்வார்கள். இந்த முக்கியப் பிரச்னையுடன் கூடுதலாக வேறு சில பிரச்னைகளும் இருக்கலாம். ஸ்பெல்லிங் சொல்ல முடியாமலும், கையெழுத்து சரிவர இல்லாமலும் சிரமப்படுவார்கள்.

புறக்கணிப்பதையும் அவமதிப்பதையும் விட்டுவிட்டு, இந்தக் குழந்தைகளுக்காக கற்றல் முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொடுத்தால், இவர்கள் அதிபுத்திசாலிகளாக மிளிர்வார்கள். எல்லாக் குழந்தைகளும் சிறப்புப் பயிற்சியாளர்கள் நியமிக்கும் அளவுக்கான வசதியான குடும்பத்தில் இல்லை. பொதுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் சிறப்புக் குழந்தைகளைக் கையாளும் பயிற்சி கொடுக்கவேண்டியது அவசியம்” என்றார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன், லியானார்டோ டாவின்சி ஆகியோருக்கு டிஸ்லெக்ஸியா குறைபாடு இருந்திருக்கிறது. இதுமட்டுமல்ல, நம் கேள்விகளுக்கு மிகப் பொறுமையாகவும் தெளிவாகவும் பதிலளித்துக்கொண்டிருந்த மருத்துவர் சுப்ரமணியன்கூட டிஸ்லெக்ஸியா சிறப்புடையவர்தான். சில நிமிடத்துக்கு முன் அவர் உதிர்த்த மௌனப் புன்னகையின் அர்த்தம் இப்போது புரிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!