`அரசை ஏமாற்றும் காரியத்தில் புரோக்கர்கள்' - சேலம் கலெக்டரிடம் பொங்கிய பா.ம.க-வினர்

 புரோக்கர்கள் மீது பாமக புகார்

``அரசை ஏமாற்றும் காரியத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களைச் சிலர் தூண்டிவிடுகிறார்கள்'' என்று சேலம் கலெக்டரிடம் பா.ம.க-வினர் புகார் அளித்தனர்.

சேலம் மாவட்டத்தின் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக இருந்த நிலங்களைக் கையகப்படுத்தி அதற்காக இழப்பீட்டு தொகை வழங்கிய பிறகு, மீண்டும் எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் இழப்பீட்டுத் தொகை கேட்டு முறையிட்டிருக்கிறார்கள். இதற்கு சில புரோக்கர்கள் இழப்பீட்டுத் தொகை அதிகமாக வாங்கித் தருவதாக நிலம் கொடுத்த மக்களையும் அரசையும் ஏமாற்றும் காரியத்தில் இறங்கியிருக்கிறார்கள் என்று சேலம் கலெக்டரை சந்தித்து பா.ம.க சார்பாகக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதுபற்றி துணைப் பொதுச் செயலாளர் அருள், `சேலம் வட்டம் பகுதிகளில் செல்லும் என்.ஹெச்.07, என்.ஹெச்.47 நெடுஞ்சாலைகளின் விரிவாக்கப் பணிகளுக்காகத் தேசிய நெடுஞ்சாலைத்துறை மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறை மூலம் அயோத்தியாப்பட்டணம் முதல் மல்லூர் வரை நிலம் கையகப்படுத்தி கடந்த 2007-ம் ஆண்டு அந்தக் காலகட்டத்தில் அரசு வழிகாட்டி மதிப்பின்படி நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு சிலர் போலியான ஆவணங்களைக் கொடுத்து மேற்படி நிலத்தின் உரிமையாளர்களைத் தூண்டிவிட்டு வழக்கு பதிய சொல்லி கூடுதல் இழப்பீடு கேட்டிருக்கிறார்கள்.

கூடுதல் இழப்பீடு வழங்க எவ்வித முகாந்திரமும் இல்லை. தாக்கல் செய்யும் ஆவணங்கள் அனைத்தும் போலியானவை. இதனால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்படும். ஒரு சில தனிநபர் ஆதாயம் பெறுவதற்காக இப்படி செய்கின்றனர். உரிய நில உரிமையாளர்களை விசாரித்தால் இந்த உண்மை தெரியவரும். எனவே, இது தொடர்பாக வரும் எந்த ஆவணங்களையும் உரிய விசாரணை செய்து நிராகரிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!