வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (13/04/2018)

கடைசி தொடர்பு:20:20 (13/04/2018)

`பிரச்னையை முடித்து வையுங்கள்' என்றேன் மோடியிடம்! - காவிரி போராட்டத்தில் பாரிவேந்தர்

பிரதமர் மோடியை சந்திக்கும் போதெல்லாம் காவிரி பிரச்சனை குறித்து பேசி வருகிறேன் என இந்திய ஜன நாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்தார்.

காவிரி ஐஜெகே போராட்டம்

``தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காவிரி பிரச்னை குறித்தும் விவசாயிகள் பிரச்னை குறித்தும் நான் பிரதமர் மோடியைச் சந்திக்கும்போதெல்லாம் பேசி வருகிறேன்'' என்று இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்தார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூரில் இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில், அதன் தலைவர் பாரிவேந்தர் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாரிவேந்தர், ``தமிழகத்தின் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் காவிரி பிரச்னைக்கான காரணம் 60 ஆண்டுகளாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகள்தான். ஆனால், இன்றைக்கு பிரச்னைக்கு காரணமானவர்களே காவிரி பிரச்னைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு தமிழகத்தின் ஆட்சியில் இருப்பவர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துகிறார்கள். அவர்களுக்கு ’ஸ்கீம்’ என்றால் என்னவென்றே தெரியவில்லை என டெல்லி நீதிமன்றங்களில் தெரிவிக்கிறார்கள்.

IJK ARPATTAM

காவிரி விவகாரத்தில் பிரச்னை குறித்து உச்ச நீதிமன்றம் நாள் குறித்தது. தமிழக ஆட்சியாளர்கள் திறமையான வழக்கறிஞர்களை வைத்து காவிரிக்காக வாதாடி பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வராததால், இப்போது காவிரி பிரச்னை தொங்கிக்கொண்டு நிற்கிறது.
தமிழக எம்.பி-க்கள் அனைவரும் ராஜினாமா செய்திருந்தால் மத்திய அரசு தொடர்ந்திருக்காது. பிரச்னை முடிவுக்கு வந்திருக்கும். சில மாதங்களுக்கு முன்பு டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கோவணத்துடன் பாம்பை வாயில் வைத்து நம் விவசாயிகள் போராடினார்கள். அன்றைய தினம் நான் பிரதமரை சந்தித்தேன். எங்கள் விவசாயிகளின் போராட்டம் உங்கள் பார்வையில் கிராமியத் தனமாக இருக்கலாம். ஆனால், அவர்கள் உயிர் பிரச்னைக்காக, வாழ்வாதார பிரச்னைக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள்தான் இந்தப் பிரச்னையை முடித்து வைக்க வேண்டும் என அப்போது மோடியிடம் தெரிவித்தேன்.

விவசாயம் என்பது பொழுதுபோக்கு இல்லை, உயிர். கிராமப்புற மக்கள்தான் விவசாயத்தை நம்பி வாழ்கிறார்கள். விவசாயம் செய்து பெருமையோடு தன்மானத்தோடு விவசாயிகள் வாழ்வதற்கு காவிரியில் தண்ணீர் வர வேண்டும். காவிரி உரிமையைப் பெறுவதற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்’’ என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க