``போலீஸுக்கு 2,000 ரூபாய் கொடுக்கிறோம்" - நொய்யல் மணல் கொள்ளையர்கள் பகீர்!

போலீஸாருக்கு மாமுல் கொடுத்துதான், நொய்யல் ஆற்றில் மணல் திருடிகிறோம் எனக் கொள்ளையர்கள் கூறிய பகீர் வீடியோ வைரலாகி வருகிறது.

`போலீஸாருக்கு மாமூல் கொடுத்துதான், நொய்யல் ஆற்றில் மணல் திருடுகிறோம்' எனக் கொள்ளையர்கள் கூறிய பகீர் வீடியோ வைரலாகி வருகிறது.

மணல் கொள்ளை

அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த மணல் கொள்ளை, இன்று ஆறுகள் இருக்கும் இடங்களில் எல்லாம் கொடிகட்டி பறக்கிறது. இதற்கு நொய்யல் ஆறும் விதிவிலக்கல்ல. ஆலாந்துறை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் இரவு பகல் பாராமல் மணல் கொள்ளை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், மணல் கொள்ளையில் ஈடுபடும் நிறுவனத்திடம், கோவை பா.ம.க-வைச் சேர்ந்தவர்கள் பேசும் வீடியோ வெளிவந்துள்ளது.

அதில், பா.ம.க நிர்வாகியிடம் பேசும் இருவர், "ஒவ்வொரு டைப்பும் ஒவ்வொரு ரேட்டு. ஆத்து மணலும் இருக்கு. கூலி, ட்ரான்ஸ்போர்ட் எல்லாம் பொறுத்துதான் விலை வரும். போலீஸாருக்கு ஒரு யூனிட்டுக்கு 2,000 ரூபாய் கொடுக்கிறோம். அதேபோல, ஆர்.டி.ஓ-வுக்கும் காசு கொடுக்கணும். இல்லாட்டி வண்டி எடுக்க முடியாது பெரிய பிரச்னையாகிடும்" என்கின்றனர்.

இந்நிலையில், மணல் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறி, பா.ம.க-வினர், இன்று காலை ஒரு வாகனத்தை போலீஸாரிடம் பிடித்துக் கொடுத்தனர். அப்போது, மணல் கொள்ளையைத் தடுக்கக் கோரி முன் அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி பா.ம.க-வினரை போலீஸார் கைது செய்தனர்.

பா,ம.க

இதுதொடர்பாகப் போலீஸாரிடம் கேட்டதற்கு, "அவர்கள் வாகனத்தில் கொண்டு வந்தது எம்-சாண்ட் மணல். அதற்கான பில் எல்லாம் பக்காவாக வைத்துள்ளனர். வண்டியை ஸ்டேஷனில்தான் வைத்துள்ளோம். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் பா.ம.க-வினரை கைது செய்துள்ளோம். இது தொடர்பாக ஆர்.டி.ஓ-வுக்கு தகவல் கொடுத்துள்ளோம். சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரையும் வரச் சொல்லியுள்ளோம். இது ஆற்று மணல் என்று உறுதி செய்தால், அந்தச் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுப்போம். எம்-சாண்ட் மணல் என்றால், பா.ம.க-வினர் மீது நடவடிக்கை எடுப்போம்" என்றனர்.

இதுகுறித்து, பா.ம.க இளைஞர் அணியின் அசோக் ஶ்ரீநிதி கூறுகையில், "அவர்கள் திருடியது ஆற்று மணல்தான். நேற்று இரவிலிருந்து, அவர்களை ஃபாலோ செய்து நாங்கள் பிடித்துள்ளோம். அந்த நிறுவனத்துக்கு குவாரியில் மணல் எடுப்பதற்கு, கடந்த 5-ம் தேதியுடன் அவகாசம் முடிந்துவிட்டது. அப்படியிருக்கும்போது, குவாரியிலிருந்து, தற்போது எப்படி மணல் எடுக்க முடியும். இது ஆற்று மணல்தான் என்பதற்கு எங்களிடம் போதிய ஆவணம் உள்ளது" என்றார்.

இது குறித்து கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி மூர்த்தியிடம் கேட்டதற்கு, "மணல் கொள்ளைக்கு, போலீஸார் மாமூல் வாங்கியது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மணல் கொள்ளை குறித்து கோவை டி.ஆர்.ஓ துரை ரவிசந்திரனிடம் கேட்டபோது, "மணல் கொள்ளை எங்கு நடக்கிறது?" என்று நம்மிடம் கேட்டார். "நொய்யலில்தான்" என்று நாம் கூறியதையடுத்து, "நொய்யலில் தண்ணீர் வந்தே ரெண்டு வருஷம் ஆச்சு. அப்புறம் எப்படி மணல் இருக்கும்?" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!