குழாய்களை உடைக்கும் மர்ம நபர்கள்... வீணாகும் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர்

குடிநீர் குழாய்களை உடைக்கும் மர்ம நபர்களைப் போலீஸார் ரகசியமாகக் கண்காணிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது கடுமையான கோடைக்காலம் என்பதால் தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் தாண்டவமாடிக்கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகிறார்கள். தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால், தண்ணீரைப் பார்த்தால் ஏதோ தங்கத்தைப் பார்த்ததுபோல் பொதுமக்கள் உற்சாகமாகிவிடுகிறார்கள். இந்நிலையில்தான் தஞ்சை மாவட்டம் உள்ளூர் ஊராட்சியில் குடிநீர் குழாய்களை மர்ம நபர்கள் உடைக்கும் கொடுமை அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இது இப்பகுதி மக்களைப் பெரும் கொந்தளிப்பி ஆழ்த்தியுள்ளது.

வீணாகும் குடிநீர்

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே அமைந்துள்ளது உள்ளூர் ஊராட்சி. கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில்தான் கடந்த வாரங்களாக இரவு நேரங்களில் மர்ம நபர்கள் குடிநீர் குழாய்களை உடைத்துவிட்டு மாயமாகிவிடுவதாக இங்குள்ள மக்கள் ஆதங்கப்படுகிறார்கள். ‘எங்க ஊர்ல எல்லா தெருக்கள்லயும் குடிநீர் குழாய்கள் முழுமையாக அமைக்கப்பட்டிருக்கு. இரண்டு மூணு நாள்களுக்கு ஒரு தடவை ஏதாவது ஒரு குழாய் உடைஞ்சி தண்ணீர் ஓடிக்கிட்டு இருக்கு. நாங்ககூட ஆரம்பத்துல இதை யதார்த்தமாகத்தான் நடக்குதுனு நினைச்சோம்.

குழாய்கள்ல துரு புடிச்சி உடைப்பு ஏற்பட்டுதான் தண்ணீர் கசியுதுனு நினைச்சோம். ஆனால், நல்லா இருக்கக்கூடிய புது குழாய்களும்கூட திடீர் திடீர்னு உடைஞ்சி தண்ணீர் கசியுது. யரோ சிலர் கெட்ட நோக்கத்தோடு வேணும்னே குழாய்களை உடைக்குறாங்கறது நல்லாவே உணர முடியுது. ஆனா, அவங்க யாருனுதான் எங்களால கண்டுபுடிக்க முடியலை. என்ன காரணத்துக்காக இப்படி செய்றாங்கனு தெரியலை. குழாய்கள்ல கசிவு ஏற்படுதுனால தண்ணீர் ஒழுங்கா வரமாட்டேங்குது. இதையெல்லாம்விட தண்ணீர் வீணாகத் தெருவுல வழிஞ்சி ஓடுறது பார்க்குறப்ப மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. காவல்துறையினர் இரவு நேரங்கள்ல ரகசியமா மஃப்டியில் கண்காணிச்சாதான் மர்ம நபர்களைக் கண்டுபுடிக்க முடியும்” என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!