வெளியிடப்பட்ட நேரம்: 18:19 (13/04/2018)

கடைசி தொடர்பு:18:19 (13/04/2018)

`தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி!’ - கோவன் கைதுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பு கண்டனம்

கோவன்

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் குழு பாடகர் கோவன், இன்று திருச்சி அருகில் உள்ள அரவானூரில் வைத்து கைதுசெய்யப்பட்டார். முன்னதாக இன்று காலையில் அடையாளத்தை மறைத்துக்கொண்டு ஒரு கும்பலாகச் சென்ற போலீஸாரை, சீருடை அணியாமல் இருந்ததால், சந்தேகப்பட்டு கேள்வி கேட்டனர். பின்னர் உள்ளூர் போலீஸாரை வரவழைத்து, கோவனைப் பிடித்துச் சென்றனர். 

இந்தக் கைது சட்ட நடைமுறைப்படி நடக்கவில்லை என்று மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு கண்டனம் தெரிவித்துள்ளார். பிரச்னை குறித்து அவரிடம் பேசினோம். 

``மக்கள் போராட்டங்களில் தினமும் பாடிவரும் தோழர் கோவனை, வன்முறை கும்பலைப்போல, சீருடை அணியாத போலீஸார் கைது செய்ய முகாமிட்டுள்ளனர். அவர் என்ன ரகசியமாக ஏதும் செயல்படுகிறாரா. சமூக விரோதமாக ஏதும் செய்கிறாரா. மக்களின் உரிமைகளைப் பற்றி, மது டாஸ்மாக் கொடுமையைப் பற்றி, நீட் அநீதியைப் பற்றி, காவிரி நீர் உரிமையைப் பற்றி, மக்கள் மத்தியில் கூட்டங்களில் பாடல் பாடுகிறார். அதே கருத்தைத்தானே பல்வேறு அமைப்புகள், கட்சிகளின் தலைவர்கள் பொதுத்தளத்தில் பேசுகிறார்கள். ஆனால், தோழர் கோவனை மட்டும் கைது செய்திருப்பது ஏன். அதுவும், இன்ன சம்பவத்துக்காக, இன்ன வழக்குக்காகக் கைது செய்கிறோம் எனக் கூறுவதில் போலீஸாருக்கு என்ன தயக்கம்? 

வழக்கறிஞர் ராஜு மக்கள் அதிகாரம்

கடந்த மார்ச் 24-ம் தேதியன்று திருச்சியில் காவிரி உரிமைக்காக மக்கள் அதிகாரம் அமைப்பு முற்றுகைப் போராட்டம் நடந்தது. 8,000 பேர் கலந்துகொண்டார்கள். ஓ.என்.ஜி.சி, மீத்தேன், ஸ்டெர்லைட் எனக் கார்ப்பரேட் கொள்ளையைக் கண்டித்து, மக்கள் போராட்டங்களில் அரசியல் இயக்கங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இதற்காக மக்களை அச்சுறுத்த, மத்திய மோடி அரசின் வழிகாட்டலின்படி எடப்பாடி அரசு  கண்ணை மூடிக்கொண்டு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. ஒருவரைக் கைது செய்யும்போது என்னென்ன முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என 1,000 முறை உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. ஆனால், அதைத் தமிழக போலீஸ் ஒரு பொருட்டாகக்கூட மதிக்கவில்லை. திருச்சி கே.கே.நகர் போலீஸ்நிலையத்தில் அவரைப் பிடித்துவைத்துக்கொண்டு, பூட்டிக்கொண்டு உள்ளே இருக்கிறார்கள். யாரையும் அவரிடம் பேசவிடாமல் தடுக்கிறார்கள். 

ஆற்றில் ஏர் ஓட்டி இளைஞர்கள் போராட்டம் நடத்தினாலும் கைதுசெய்கிறார்கள். அவர்களின் இந்தப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு யாருக்கு என்ன பிரச்னை. போராடுவது சட்டப்படி குற்றம் இல்லை. போராட்டங்களுக்குக் காவல்துறை பாதுகாப்புத் தர வேண்டும். அதற்குப் பதிலாக ரவுடிகளைப்போல, கூலிப்படையினரைப்போல தோழர் கோவனைக் கைது செய்கிறது, இந்த அரசாங்கம். பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்த பின்னர், பக்கத்தில் சீருடை அணிந்த போலீஸாரையும் கூட்டமாக வரவழைத்து, அவரைப் பிடித்துக்கொண்டு போனார்கள். தமிழ்நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுகிறது. போலீஸ்துறையானது அதன் தன்மையை இழந்து ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதிக்கிறது” என்று வழக்கறிஞர் ராஜு கூறினார்.