வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (13/04/2018)

கடைசி தொடர்பு:21:24 (13/04/2018)

“சாகும்வரை வைகோவை சிறையில் அடைக்க வேண்டும்” - கொந்தளிக்கும் ஹெச்.ராஜா

வைகோ தேசத்துரோகி, அவரைச் சாகும்வரை சிறையில் அடைக்க வேண்டும் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ஹெச்.ராஜா

காவிரி தொடர்பாகத் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், தமிழக எதிர்க்கட்சிகள் மத்திய அரசையும் பா.ஜ.க-வையும் குற்றம்சாட்டி வருகின்றன. இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க தேசியச் செயலர் ஹெச்.ராஜா, “காவிரி விவகாரம் எனக் கூறி ஐ.பி.எல் போட்டியைப் பார்க்க வந்த இளைஞர்களின் உடைகளை அகற்றச் சொல்வது ரௌடித்தனமான செயல். இந்தச் செயல்களில் ஈடுபட்ட அனைவரும் தேசத்துரோகிகள். சீமானுடன் சேர்த்து பாரதிராஜா, வைரமுத்து, அமீர், கௌதமன் போன்றவர்களையும் கைது செய்ய வேண்டும். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 750 பேருமே தேசத்துரோகிகள். இவர்கள் அனைவரையும் கைது செய்தால் மட்டுமே போதும், நாடு வளமாகிவிடும். தமிழகம் வந்த பிரதமரை அனைவரும் சென்று வரவேற்றிருக்க வேண்டும். அதைவிட்டு அவருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டுவது மிகவும் கீழ்த்தரமான செயல். 

தமிழக நலனுக்காகவும் இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காகவும் தொடங்கப்பட்டதுதான் ராணுவ தளவாடக் கண்காட்சி. தமிழகத்தின் மீதும் இளைஞர்களின் மீதும் அக்கறை இருந்திருந்தால் தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினே நேரில் வந்து பிரதமரை வரவேற்றிருக்க வேண்டும். ஆனால், அவருக்கு தமிழகத்தின்மீது சிறிதும் அக்கறையில்லை. கருணாநிதிக்குத் தெரிந்த அரசியல் தந்திரங்கள் ஸ்டாலினுக்கு சிறிதும் இல்லை. இப்போதுதான் கருணாநிதியின் திறமையைக் கண்டு வியப்படையத் தோணுகிறது. 1967-ல் காவிரி கரைபுரண்டு ஓடியது. ஆனால், இப்போது காவிரியில் ஸ்டாலின் மேடைபோட்டு பேசிக்கொண்டிருக்கிறார். தமிழகத்திலிருந்து தி.மு.க என்ற தீய சக்தியை ஒழித்தால் மட்டுமே தமிழகம் முன்னேறும்.

தி.மு.க ஆட்சியின்போது கர்நாடகாவில் கட்டப்பட்ட ஹேமாவதி அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அப்போது ஆட்சி செய்த கருணாநிதி அணையின் மூலம் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனக் கூறினார். நெடுவாசல் திட்டத்தைக் கொண்டுவந்தது ஸ்டாலின், மீத்தேன் திட்டத்துக்குக் கையெழுத்திட்டவர் ஸ்டாலின், 2010-ம் ஆண்டு நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி வழங்கியவர் ஸ்டாலின். இப்படி எல்லாவற்றையும் தி.மு.க கொண்டுவந்துவிட்டு தற்போது மத்திய அரசைக் குறைகூறுவது எந்த வகையில் நியாயம். வைகோ இந்தியாவிலிருந்து தமிழகத்தைப் பிரித்துவிடுவோம் எனக் கூறுகிறார். தமிழகத்தில் இருப்பவர்கள் காசியைப் புனிதம் என்றும் காசியில் இருப்பவர்கள் ராமேஸ்வரத்தைப் புனிதம் என்றும் நினைக்கும் வரை இந்தியாவிலிருந்து தமிழகத்தைப் பிரிக்க முடியாது. இந்தியாவின் முதல் தேசத்துரோகி வைகோதான். அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்து, சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டும்.  யாருக்கும் தெரியாமல் கள்ளத்தோணியில் இலங்கை சென்றவர் வைகோ. அவர் பிரதமரை குறைகூறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

காவிரி மேலாண்மை வாரியம் என்பது கட்டடமோ பேப்பரோ அல்ல உடனடியாக வாங்கித் தருவதுக்கு. அது 9 பேர் கொண்ட குழு. அந்தக் குழுவுக்கு ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஒரு உறுப்பினரைப் பரிந்துரை செய்ய வேண்டும். அவ்வாறு அனைத்து மாநிலங்களும் உறுப்பினரைப் பரிந்துரை செய்தார்களா?. மேலாண்மை வாரியம் என்றால் என்ன?. அது எவ்வாறு செயல்படும் என்பது பற்றி தெரியாதவர்கள் எல்லாம் அதுக்காகப் போராடத் தொடங்கிவிட்டார்கள்” எனக் கடுமையாகப் பேசினார்.