`சேலம் ஆட்சியர் அலுவலகம் எதிரே திரண்ட மாணவர்கள்!’ - வலுக்கட்டாயமாக கலைந்துபோகச் சொன்ன காவலர்கள்

சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே திரண்ட மாணவர்கள்

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டம் நாடு தழுவிய அளவில் கவனம் பெற்றது. அந்தப் போராட்டத்தைப்போல மீண்டும் ஒரு போராட்டம் நடந்துவிடக் கூடாது என்பதில் மாநில அரசும் மத்திய அரசும் மிகுந்த கவனத்தில் இருந்து வருகிறது. தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து பல தரப்பினரும் போராட்டம், மறியல், உண்ணாவிரதம், கையெழுத்து இயக்கம் என மத்திய அரசுக்கு பல வகையில் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இதனால் பொது இடங்கள், கலெக்டர் அலுவலகம், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மாணவர்கள் சேர்ந்தால் உடனே காவல்துறையினர் விசாரணை செய்து அவர்களை அப்புறப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு சேலத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்தனர். மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், `உப்பு நீரில் விவசாயம் செய்ய முடியும் என்றால் தமிழக விவசாயிகள் கண்ணீரில் விவசாயம் செய்துவிடுவார்கள்!’ என்ற  பதாகைகளை ஏந்தியவாறு கலெக்டர் அலுவலகத்தின் எதிரே அவர்கள் சங்கமம் ஆனார்கள்.

இதையடுது சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், மாணவர்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். காவலர்களிடம், `காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் யாருக்கும் இடையூறு இல்லாமல் அறவழியில் போராட்டம் செய்கிறோம். எங்களைத் தடுக்காதீர்கள்’ என்று மாணவர்கள் முறையிட்டார்கள். மாணவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காத போலீஸார், அவர்களை வலுக்கட்டாயமாக அனைத்து மாணவர்களையும் துரத்திவிட்டனர்.

இதுகுறித்து போராட்டம் நடத்த முயன்ற மாணவர்களிடம் பேசினோம். ''மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், அந்தத் தீர்ப்பை மதிக்காமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருக்கிறது. அதற்கு அறவழியில் எங்களுடைய கண்டனத்தைத் தெரிவிக்க வந்தோம். ஆனால், காவல்துறையினர் எங்களைத் துரத்திவிடுகிறார்கள். காவல்துறையினரிடம் நாளை போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருக்கிறோம். அவர்களும் கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். நாளை தமிழகமே திரும்பி பார்க்கும் வகையில் சேலத்தில் எந்தக் கட்சி சார்பும் இல்லாமல் போராட்டம் செய்வோம்'' என்றார்கள். அதையடுத்து வாட்ஸ் அப்பில் `நாளை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கட்சி சாயம் இல்லாமல் அனைத்து மாணவர்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரே திரண்டு வாருங்கள்’ என்று அழைப்பு விடுக்கப்பட்டு வருவதால் காவல்துறை அலெர்ட்டாக இருந்துவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!