வெளியிடப்பட்ட நேரம்: 20:32 (13/04/2018)

கடைசி தொடர்பு:13:05 (14/04/2018)

முக்கிய குற்றவாளிகள் விடுதலையா? சேலத்தில் தண்டனை பெற்றவர்கள் வேதனை!

முக்கிய குற்றவாளிகள் விடுதலையா? சேலத்தில் தண்டனை பெற்றவர்கள் வேதனை!

சேலம் வீராணத்தை அடுத்த பள்ளிக்கூத்தானூர் பகுதியில் 2003-ம் ஆண்டு சுந்தரராஜன், குப்புசாமி கொலை வழக்கு சேலம் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  நீதிபதி ரவீந்தரன் விசாரணை செய்துவந்த இந்த வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், 7 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 5 பேருக்கு ஒற்றை ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. அதையடுத்து, நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உறவினர்கள் கதறிக் கண்ணீர் வடித்தனர்.

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களிடம் விசாரித்தபோது, ”நாங்கள் சேலத்தை அடுத்த வீராணம் பள்ளிக்கூடத்தானூர் பகுதியில் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இவ்வழக்கில் கொலை செய்யப்பட்ட சுந்தரராஜன், குப்புசாமி ஆகியோர் ஊருக்குள் ரவுடிகளாக வலம் வந்தார்கள். ஊருக்குள் அனைவரிடமும் பிரச்னைகள் செய்துவந்தார்கள். ஊரையே இவர்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு அனைவரையும் மிரட்டி, அடித்து தொந்தரவு செய்துவந்தார்கள்.

கொலை செய்தவர்களில் ஒருவர்

சம்பவம் நாளான 15.7.2003-ம் தேதி மாலை 6 மணிக்கு, அவர்கள் இருவரும், பூசாரி அருணாசலம் கடையில் சிக்கன் வாங்கிவிட்டுப் பணம் கொடுக்கவில்லை. பூசாரி, பணம் கேட்டதால் அவரை அடித்து உதைத்தார்கள். இதையடுத்து, அவர் ஊருக்குள் வந்து முறையிட்டார். ஊர்க்காரர்கள் அனைவரும் சேர்ந்து சுந்தரராஜனையும், குப்புசாமியும் அடித்துக் கொலை செய்துவிட்டார்கள். அதையடுத்து, அன்றைய சேலம் மாவட்ட எஸ்.பி.பொன்மாணிக்கவேல் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்துவிட்டு, ”பரவாயில்லை. ரவுடிகளை ஊரே சேர்ந்து அடித்துக் கொலை செய்திருக்கிறீர்கள். இப்படிச் செய்தால்தான் ரவுடிகள் திருந்துவார்கள். வயதானவர்கள் 6 பேரும் சரணடைந்துவிடுங்கள். மேற்கொண்டு நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்று கூறிவிட்டுச் சென்றார்.  

ஆனால், இந்தக் கொலை விவகாரம் தொடர்பாக அந்த ஊரில் 103 பேரைக் காவல் துறை கைதுசெய்தது. பிறகு, அதில் 24 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சேலம் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி ரவீந்தரன் விசாரித்துவந்தார். அரசுத் தரப்பில் வழக்கறிஞர்கள் கிருபைவரன், திருநீலகண்டன் ஆஜரானார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தனித்தனியே வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடி வந்தார்கள்.

விசாரணை முடிந்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நடேசன், ஜெகன் (எ) ஜெகநாதன், குமரவேல், அண்ணாமலை, செல்வம், தியாகராஜன், செல்வராஜ் ஆகிய 7 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சேகர், தர்மலிங்கம், செல்வம், குமரேசன், மாணிக்கம் ஆகிய 5 பேருக்கு ஒற்றை ஆயுள் தண்டனையும், விஜயா, கிருஷ்ணம்மாள், மாது ஆகிய 3 பெண்களுக்கு 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த குட்டி (எ) செல்வம், பூசாரி (எ) அருணாசலம், முருகேசன், கலைவாணன், மணிமாறன் ஆகிய 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்குத் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்த சடையன், கருப்பன், நிலா ஆகியோர் ஏற்கெனவே இறந்துவிட்டனர். இதுதவிர இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பழனிவேல் என்பவரை நக்சல் தொடர்பு இருப்பதாகச் சொல்லி தனிவழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.

நீதிபதி ரவீந்தரன் வழங்கிய தீர்ப்பையடுத்து, ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் குவியத் தொடங்கினார்கள். தண்டனை பெற்றவர்களை அவர்களுடைய குடும்பத்தினர்களும், உறவினர்களும் கட்டிப்பிடித்துக் கதறி அழுத காட்சி, அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. தங்கள் அப்பாக்கள் சிறைக்குச் செல்வதைப் பார்த்து கண்ணீர் வடித்த குழந்தைகள், அவர்களுடைய கன்னத்தில் முத்தம் கொடுத்து அழுத காட்சி மிகவும் பரிதாபமாக இருந்தது. அதையடுத்து தண்டனை பெற்றவர்கள் 3:00 மணிக்கு காவல் துறை வாகனத்தில் ஏற்றப்பட்டுக் கோவை மத்திய சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். 

போலீஸ்

இதுபற்றி ஒற்றை ஆயுள் தண்டனை பெற்ற சேகர் என்பவரிடம் பேசியபோது, ”நான் 5 வயது குழந்தையாக இருந்தபோது போலியோ நோய் தாக்குதலுக்கு ஆளாகி கால் செயலிழந்ததால் என்னால் சரியாக நடக்க முடியாது. 75 சதவிகிதம் கால்கள் ஊனம் என்ற சான்றிதழ் பெற்றிருக்கிறேன். எனக்குக் கண் பார்வையும் குறைவு. சம்பவம் நடந்தபோது ஊரே கூடி கும்பலாக இருந்தது. அந்தக் கும்பலைவிட்டு விலகி ஓர் ஓரமாக நின்றுகொண்டிருந்தேன். இந்த வழக்குக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. எனக்கு ஆயுள் தண்டனை வழங்கி இருக்கிறார்கள்'' என்றார், வேதனையுடன்.

இரட்டை ஆயுள் வழங்கப்பட்ட குமரவேல், "சம்பவம் நடந்தபோது நான் ஊரிலேயே இல்லை. கலரம்பட்டியில் தறி ஓட்டிக் கொண்டிருந்தேன். இந்த வழக்குக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் சம்பந்தமே இல்லாதவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்திருக்கிறார்கள்'' என்றார். செந்தில் என்பவர், ``எங்கள் குடும்பத்தில் 4 பேர்மீது ஆயுள் தண்டனை விதித்திருக்கிறார்கள். எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கொலைக்குச் சம்பந்தம் இல்லாதவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்திருக்கிறார்கள். இதனால் எங்கள் குடும்பமே பெரிய பாதிப்புக்குள்ளாகி இருக்கிறோம்'' என்று கண்ணீர்விட்டார்.

கைது செய்யப்பட்டவர்கள்

இதுகுறித்து அரசு தலைமை வழக்கறிஞர் தனசேகரன், ”பாதிக்கப்பட்டவர்கள் பல கதைகளைச் சொல்லலாம். அதைப் பற்றி நான் பேச முடியாது. இந்த வழக்கைப் பொறுத்தவரை, நீதியரசர் முழுமையாக விசாரணை செய்து தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். இது சரியான தீர்ப்பு'' என்றார்.

அப்போது, சேலத்தில் எஸ்.பி-யாக இருந்த பொன்மாணிக்கவேலிடம் விளக்கம் கேட்பதற்காகப் பலமுறை தொடர்புகொண்டும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவருடைய விளக்கம் கிடைத்தால் அதையும் பதிவு செய்வோம்.


டிரெண்டிங் @ விகடன்