`காஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து பேச்சு’ - கோவை சட்டக் கல்லூரி மாணவி சஸ்பெண்ட்!

கோவை  அரசு சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் பிரியா.பொறியியல் பட்டதாரியான பிரியா , சட்டப்படிப்பின் மீதுள்ள ஆர்வம் காரணமாக சட்டப்படிப்பு படித்து வருகின்றார். மேலும் புரட்சி கர மாணவர் முன்னணி என்ற அமைப்பில் உறுப்பினராகவும் இருந்து வருகின்றார். இந்நிலையில் இன்று காலை வகுப்பறையில் பொதுவான சம்பவங்கள் குறித்து  பேசும் படி ஆசிரியர்  மாணவர்களிடம் கேட்டுள்ளார்.

 சட்டக் கல்லூரி மாணவி பிரியா

யாரும் பேசவராத நிலையில் மாணவி பிரியாவை ஏதாவது ஓரு தலைப்பில் பேசும்படி ஆசிரியர் தெரிவிக்கவே, காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேசியுள்ளார். அப்போது அங்கு வந்த உதவி பேராசிரியர் அம்மு என்பவர், மாணவி பிரியாவைத் திட்டியுள்ளார். மேலும், வகுப்பில் இருந்த ஆசிரியரையும் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மாணவியின் பேச்சு குறித்து வகுப்பறையில் இருந்த சக மாணவர்கள் சிலரும், உதவி பேராசியர் அம்முவும் முதல்வரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, மாணவியை கல்லூரி நிர்வாகம் இன்று சஸ்பெண்ட் செய்து அதற்கான உத்தரவினை மாணவியிடம் வழங்கியது. அந்த உத்தரவில், "மாணவர்களுக்கு இடையே பாலினம் மற்றும் மத ரீதியாக மோதல் ஏற்படும் வண்ணம் பேசியதாலும், அதை கேட்க சென்ற ஆசிரியையை அச்சுறுத்தும் விதமாக செயல்பட்டதாகவும் , மத அரசியல் மற்றும் பாலியல் ரீதியான மோதல் ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் மாணவியை சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்" என கூறப்பட்டுள்ளது.

சஸ்பெண்ட்

இதுகுறித்து மாணவி பிரியா கூறுகையில்,"ஆசிரியரின் அனுமதியுடனே வகுப்பறையில் பேசினேன். ஆனால், அது குறித்து எந்த விசாரணையும் நடத்தாமல் என் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பாக, மற்ற மாணவர்களிடமும் எந்த விசாரணையும் நடத்தவில்லை.  எத்தனை நாள்கள் சஸ்பெண்ட் செய்துள்ளனர் என்பதையும் தெரிவிக்கவில்லை.
நான் மாணவர் அமைப்பில் இருப்பதால், அனைத்து விஷயங்களுக்கும் முதலில் குரல் கொடுப்பேன். வாட்ஸ் அப்பில் நான் பகிரும் தகவல்கள் குறித்தெல்லாம் விமர்சிக்கிறார்கள். அது என் தனிப்பட்ட விஷயம். இதையெல்லாம் மனதில் வைத்துதான் என்னை சஸ்பெண்ட் செய்துள்ளனர். மே 14-ம் தேதி, எனக்கு தேர்வு தொடங்க உள்ளது. தற்போது ஹால் டிக்கெட் கொடுப்பார்களா? என்றும் தெரியவில்லை. இது தொடர்பாக, கல்லூரி முதல்வருக்கு கடிதம் அனுப்ப இருக்கிறேன். விசாரணைக்கு அழைத்தால் சென்று எனது தரப்பு நியாயத்தை சொல்வேன். அதைத் தொடர்ந்து, சட்டரீதியாக செயல்படுவதை தவிர வேறு வழியில்லை." என்றார்.

இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக கல்லூரி நிர்வாகத்தையும், பேராசிரியர் அம்முவையும் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து பதில் இல்லை. இதுகுறித்து அவர்கள் தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்தால், அதையும் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!