வெளியிடப்பட்ட நேரம்: 02:15 (14/04/2018)

கடைசி தொடர்பு:02:15 (14/04/2018)

மகளை ஆணவகொலை செய்ய முயற்சித்த தந்தை - காப்பாற்றிய பொதுமக்கள்..!

 ராமநாதபுரம் அருகே காதல் திருமணம் செய்ததால் பெற்ற மகளையே கொசு மருந்து கொடுத்து கொலை செய்ய முயன்ற தந்தையை சத்திரக்குடி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ராமநாதபுரம் அருகே காதல் திருமணம் செய்ததால் பெற்ற மகளையே கொசு மருந்து கொடுத்து கொலை செய்ய முயன்ற தந்தையை சத்திரக்குடி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காதல் திருமணம்ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ளது செம்பங்குடி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் நிவைதா (17). நிவைதாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த காளிராஜன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நிவைதா பெற்றோருக்கு தெரியாமல் காளிராஜனுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்.

இது தொடர்பாக சண்முகம் கொடுத்த புகாரினை தொடர்ந்து சத்திரக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து வெளியூரில் வசித்து வந்த காளிராஜனை கைது செய்ததுடன் அவருடன் தங்கியிருந்த மைனர் பெண்ணான நிவைதாவை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்பின் போஸ்கோ சட்டத்தின் கீழ் காளிராஜன் சிறையில் அடைக்கப்பட்டார். நிவைதாவை ஹோமில் தங்கியிருக்க மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து காப்பகத்தில் தங்கியிருந்தார் நிவைதா. 

காப்பகத்தில் தங்கியிருந்த நிவைதாவை அவரது தந்தை சண்முகம் சில நாட்களுக்கு வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதற்கிடையே நேற்றிரவு திடீரென சண்முகம், தனது மகள் என்றும் கருதாமல் நிவைதாவுக்கு ஆல் அவுட் கொசு மருந்தினை வாயில் ஊற்றி கொலை செய்ய முயன்றுள்ளார். தந்தையின் செயலால் அலறிய நிவைதாவின் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சத்திரக்குடி போலீஸார் மகளைக் கொலை செய்ய முயன்ற சண்முகத்தினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காளிராஜனை காதல் திருமணம் செய்ததால் அவமானம் ஏற்பட்டதாகவும் அதனால், சண்முகம் மகளைக் கொலை செய்ய முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.