27-ம் தேதி நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேகம் - முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆலோசனை! | nellaiyappar temple kumbabishekam to be held on 27 april

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (14/04/2018)

கடைசி தொடர்பு:00:00 (14/04/2018)

27-ம் தேதி நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேகம் - முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆலோசனை!

நெல்லையப்பர் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், பக்தர்கள் வசதிக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை நிறைவேற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நெல்லையப்பர் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், பக்தர்கள் வசதிக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை நிறைவேற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

கும்பாபிஷேகம் - ஆலோசனை

நெல்லையின் அடையாளங்களில் ஒன்றான நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோயிலின் கும்பாபிஷேகப் பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி பாலாலயத்துடன் தொடங்கியது. இதற்காக 4.92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து வரும் 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதில் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள் என்பதால், அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

அதில் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ’’நெல்லையப்பர் கோயிலின் குடமுழுக்கு விழா வரும் 27-ம் தேதி காலை 9.30 மணி முதல் 10.25 மணிக்குள் நடைபெற உள்ளது. இதற்காக 24-ம் தேதி முதலாகவே யாகசாலைப் பூஜைகள் நடக்க இருக்கின்றன. குடமுழுக்கு விழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் சாலைப் போக்குவரத்து வசதியினை செய்து கொடுக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்ய வேண்டும். 

பொதுமக்கள் அதிகமான அளவில் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள் என்பதால் சட்டம்-ஒழுங்கை பாதுகாத்திடும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தீயணைப்புத் துறையினர் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் உபகரணங்களுடன் போதிய அளவில் வீரர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். திருநாளன்று தடையில்லாமல் மின்சாரம் கிடைக்க மின்சார வாரிய அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். 

நெல்லை மாநகராட்சி சார்பாக கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய சுகாதாரம், தற்காலிக கழிப்பறை மற்றும் நான்கு ரதவீதிகளில் தேவையான குடிநீர் வசதிகளைச் செய்து கொடுத்திட வேண்டும். குப்பை மற்றும் கழிவுகளை உடனுக்குடன் அகற்றிட ஏற்பாடு செய்ய வேண்டும். கும்பாபிஷேக தினத்தில் அவசர கால ஊர்திகளை தயாராக வைத்திருக்க வேண்டும். மருத்துவக் குழுவினர், தேவையான மருந்துகளுடன் தயாராக இருக்க வேண்டும். 

கும்பாபிஷேக விழாவுக்கு வெளி மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவர்களுக்குத் தேவையான வசதிகளை போக்குவரத்துத் துறையினர் மேற்கொள்ள வேண்டும். நெல்லை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நெல்லையப்பர் கோயிலின் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற அனைத்து துறையினரும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டார்.