வெளியிடப்பட்ட நேரம்: 10:54 (14/04/2018)

கடைசி தொடர்பு:13:36 (14/04/2018)

காஷ்மீர் சிறுமி குறித்து கோவை சட்டக்கல்லூரி மாணவி பேசியது இதுதான்! #KathuaRapeCase

கோவை சட்டக் கல்லூரியில், முதலாம் ஆண்டு படித்துவரும் மாணவி ப்ரியா. கல்லூரியில் நேற்று ஒரு வகுப்பில் பாடம் எடுத்து முடித்த பிறகு, மாணவர்களுக்கு மேடை பயம் (Stage fear) போக வேண்டும் என்பதற்காக, அவர்களைப் பொது விஷயம் பேசுமாறு பேராசிரியர் கூறினார். 

ப்ரியா

ஆனால், எந்த மாணவரும் முன்வரவில்லை. இதையடுத்து, மாணவி ப்ரியாவை அழைத்துப் பேசுமாறு அந்தப் பேராசிரியர் கூறியுள்ளார். அப்போது, காஷ்மீரில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமி குறித்து ப்ரியா பேசியுள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த வகுப்புக்குச் சம்பந்தமே இல்லாத பேராசிரியர் அம்மு என்பவர், ப்ரியா மற்றும் அவரைப் பேசச் சொன்ன பேராசிரியரை திட்டியதாகக் கூறப்படுகிறது.

மேலும், சில மாணவர்களை அழைத்துக் கொண்டு, கல்லூரி முதல்வரிடம் ப்ரியா குறித்து புகார் அளித்துள்ளார். இதையடுத்து, மாணவி ப்ரியாவை, கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட செய்து உத்தரவிட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மாணவி ப்ரியா, புரட்சிகர மாணவர் முன்னணி அமைப்பில் இருக்கிறார். இதனால், அனைத்துப் பிரச்னைகளுக்கும் ப்ரியாவின் குரல் முதலில் ஒலித்திருக்கிறது. இதை மனதில் வைத்தே, ப்ரியா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மையில் ப்ரியா பேசியது என்ன? அவரிடமே கேட்டோம், "இந்து ஆலயத்தில் வைத்தே சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் நம் நாட்டில் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இது ஆணாதிக்கம் நிறைந்த சமூகம். பெண்கள் எப்போதும் காமத்துக்கான போதைப் பொருளாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். பெண்களின் உடைதான் இதற்குக் காரணம் எனச் சிலர் கூறுகின்றனர். 8 வயது குழந்தை என்ன மாதிரி உடை அணியும்? எனவே, இதற்கு உடை காரணம் இல்லை. ஆணாதிக்க மனோபாவம்தான் காரணம். இதைத்தான் பேசினேன்" என்றார்.

இதுகுறித்து கோவை சட்டக்கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், "அந்த மாணவி, புரட்சிகர மாணவர் முன்னணி என்ற அமைப்பில் இருக்கிறார். தொடர்ந்து, அரசு மற்றும் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். அரசுக்கு எதிராகச் போராட மாணவர்களைத் தூண்டிவிடுகிறார். அதை அவர் பொதுவெளியில் சொல்வதற்கு உரிமை உண்டு. ஆனால், கல்லூரி வளாகத்தில் அப்படிச் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கோவை அரசு சட்டக்கல்லூரி, கடந்த சில ஆண்டுகளாகச் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. இதனிடையே, அந்த மாணவி கல்லூரி நிர்வாகத்தின் பெயரை சீர்குலைக்கப் பார்த்தார். இந்நிலையில், சக மாணவர்களும், பேராசிரியர் அம்முவும் அந்த மாணவியின் மீது நேற்று 3 பக்கங்களுக்கு புகார் கடிதம் எழுதிக் கொடுத்தனர். இதையடுத்துதான், அவரை சஸ்பெண்டு செய்தோம். தனிப்பட்ட விஷயங்களுக்காக, சஸ்பெண்ட் செய்யவில்லை. சஸ்பெண்ட் என்பது தண்டனை இல்லை. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 8 மாணவர்களை சஸ்பெண்ட் செய்தோம். அவர்களில், 7 பேரின் சஸ்பெண்டை திரும்பப் பெற்றுவிட்டோம். ஆனால், இந்த பிரச்னை தற்போது, சட்டக்கல்வி இயக்குநரிடம் சென்றுவிட்டது. இனி, சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து அவர்தான் முடிவு எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக 3 பேராசிரியர்கள் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.