வெளியிடப்பட்ட நேரம்: 12:59 (14/04/2018)

கடைசி தொடர்பு:12:59 (14/04/2018)

போலீஸ் உதவி கமிஷனர் கமில்பாஷாவுக்கு நள்ளிரவில் 'ஸ்கெட்ச்' போட்ட விஜிலென்ஸ் -  அதிகாலையில் மனம்மாறிய அதிகாரிகள் 

 போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம்

போலீஸ் உதவி கமிஷனர் கமில்பாஷாவை நள்ளிரவில் 'ஸ்கெட்ச்' போட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், 5 பேருக்கு சம்மன் கொடுத்துவிட்டு 5 லட்சம் ரூபாய் பணத்துடன் புறப்பட்டுச் சென்றனர். ஆனால், யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை

சென்னை திருமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகம் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை பரபரப்பாக காணப்பட்டது. இந்த பரபரப்புக்கு லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. லவக்குமார் தலைமையிலான டீம், திருமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் சோதனை நடத்தியதே காரணம் என்ற தகவல் வெளியானது. சோதனை முடிவில் 5 லட்சத்து எட்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அதிலும் திருமங்கலம் உதவி கமிஷனர் கமில்பாஷா மற்றும் அவரது ஸ்பெஷல் டீம்மில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன், போலீஸ் டிரைவர் சிலம்பரசன், லோகிதாஸ், தமிழ் ஆகிய ஐந்து பேருக்கு விஜிலென்ஸ் சம்மன் கொடுத்துள்ளது. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``திருமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகம் ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய வளாகத்தில் செயல்படுகிறது. இங்கு கடந்த ஓராண்டாக உதவி கமிஷனராக கமில்பாஷா இருந்துவருகிறார். இவர், 1987-ம் ஆண்டில் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிக்குச் சேர்ந்தார். போக்குவரத்துப் பிரிவிலிருந்த கமில்பாஷா, சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாறினார். சென்னையில் பல காவல் நிலையங்களில் பணியாற்றிய கமில்பாஷாவுக்கு நாணயம் போல இரண்டு முகங்கள். எல்லோரிடமும் அன்பாகப் பழகும் அவர்  கடமையில் கறார் பேர்வழி. இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய கமில்பாஷா செம்மரக்கடத்தல் கும்பல் சர்ச்சையில் சிக்கியதால் அங்கிருந்து இடமாற்றப்பட்டார். தொடர்ந்து பதவி உயர்வு பெற்று உதவி கமிஷனரானார். அண்ணாநகரிலிருந்து திருமங்கலத்துக்கு இடமாறிய கமில்பாஷாவிடம் சமீபத்தில் பில்டர் ஒருவரின் வழக்கு விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டது, அந்த வழக்கு சாமர்த்தியமாக முடித்துவைக்கப்பட்டது.

போலீஸ் உதவி கமிஷனர்

 இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, திருமங்கலம் பகுதியில் செம்மரக்கடத்தல் டீம் பெரியளவில் பணத்தை கைமாற்றுவதாகத் தகவல் காவல்துறைக்கு கிடைத்தது, ஆனால், அந்த விவகாரம் அப்படியே மூடிமறைக்கப்பட்டது. இதில்தான் லஞ்ச ஒழிப்புத் துறையின் சந்தேகப்பார்வை திருமங்கலம்  உதவி கமிஷனர் ஸ்பெஷல் டீம் மீது விழுந்தது. அதன்பிறகு லஞ்ச ஒழிப்புத் துறையின் ரகசிய கண்காணிப்பில் அவர்கள் இருந்துள்ளனர். 

இந்தச்சமயத்தில்தான் கொடுங்கையூரைச் சேர்ந்த பில்டர் செல்வம், திருமங்கலம் உதவி கமிஷனர் கமில்பாஷாவுடன் பேசிக் கொண்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி. லவக்குமார் தலைமையில் 4 பேர் கொண்ட டீம் திருமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்துக்குள் அதிரடியாக இரவு 10 மணியளவில் நுழைந்தது. அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து உதவி கமிஷனர் அலுவலகத்திலிருந்து 5 லட்சத்து எட்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் பறிமுதல் செய்தனர். கணக்கில் வராத இந்தப்பணத்துக்கு விஜிலென்ஸ் தரப்பில் விளக்கமும் கேட்கப்பட்டுள்ளது. அதிகாலை 3 மணியளவில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் புறப்பட்டுச் சென்றனர். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் விசாரணை வளையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் இருந்துவருகிறார். அவரிடம் கிடுக்குப்பிடி கேள்விகளைக் கேட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட போலீஸாரின் விளக்கத்துக்குப்பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். 

 உதவி கமிஷனர் கமில்பாஷா தரப்பில் நம்மிடம் பேசியவர்கள்,  "கமில்பாஷாவின் மகன், எம்.டி படிக்க உள்ளார். அதற்காகத்தான் இந்தப் பணத்தை அவர் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், உதவி கமிஷரைப் பிடிக்காதவர்கள் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு தவறான தகவல் கொடுத்து சிக்கலை ஏற்படுத்தியுள்ளனர். பணம் தொடர்பாக உதவி கமிஷனர் விசாரணையின்போதே விளக்கத்தை கொடுத்துவிட்டார். இதனால்தான் கைது போன்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என்றனர். 

உதவி கமிஷனரை கைது செய்ய வேண்டும் என்று இரவில் சென்ற லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அதிகாலையில் மனம்மாறி விட்டதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.