வெளியிடப்பட்ட நேரம்: 13:02 (14/04/2018)

கடைசி தொடர்பு:13:02 (14/04/2018)

அம்பேத்கர் பிறந்தநாள்! - எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டத் தலைவர்கள் மரியாதை

அம்பேத்கரின் 127-வது பிறந்தநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின், திருமாவளவன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டத் தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

சட்ட மேதை அம்பேத்கரின் 127-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்திய அளவிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவருகின்றனர். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில், பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய்ய நாயுடு ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கீழ் உள்ள புகைப்படத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதேபோல கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் மற்றும் திருமாவளவன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல கோடம்பாக்கத்திலுள்ள அம்பேத்கர் சிலைக்கு பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.