வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (14/04/2018)

கடைசி தொடர்பு:15:25 (14/04/2018)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் 2 நாள்களுக்கு 144 தடை உத்தரவு..!

வீரன் சுந்தலிங்கனார் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு நாளை (15.04.18) முதல் (17.04.18) வரை 2 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

சுந்தலிங்கனார் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு நாளை (15.4.18) முதல் (17.4.18) வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், `தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா கவர்னகிரி பகுதியில் வீரன் சுந்தரலிங்கனாரின் பிறந்தநாள் விழா வரும் 16-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. எவ்வித அசம்பாவிதங்கள் இன்றி அமைதியான முறையில் இவ்விழா நடைபெறவும், சட்டம் ஒழுங்கினைப் பாதுகாத்திடும் வகையிலும் நாளை (15.4.18) மாலை 6 மணி முதல் வரும் 17.4.18-ம் தேதி காலை 6 மணி வரையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொதுக் கூட்டம் நடத்திடவும் 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதற்கும் ஊர்வலம் செல்வதற்கும், அன்னதானம் வழங்கிடவும், பிற பகுதிகளில் இருந்து கவர்னகிரிக்கு வந்து விழாவில் கலந்துகொள்ள வருபவர்கள் அபாயகரமான ஆயுதங்கள், ஜோதி ஆகியவை எடுத்து வர அனுமதி இல்லை. தூத்துக்குடி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கவர்னகிரிக்கு வாடகை வாகனங்களில் இவ்விழாவில் கலந்துகொள்ள மக்களை அழைத்து வருவதற்கும் 144 தடை உத்தரவின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடை உத்தரவு பள்ளி, கல்லூரி வாகனங்களுக்குப் பொருந்தாது.

விழாவை அமைதியான முறையில் நடத்திட மாவட்டக் காவல் துறையின் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நாள்களில் வேறு ஏதும் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்திட வேண்டுமானால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உரிய அனுமதி பெற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க