வெளியிடப்பட்ட நேரம்: 15:02 (14/04/2018)

கடைசி தொடர்பு:15:10 (14/04/2018)

சென்னையில் டூவீலர்களைத் திருடிபொதுக்கழிப்பிடத்தில் பதுக்கிய சிறுவர்கள் 

 சிறுநீர்க் கழிப்பிடம்

Representational Image

சென்னையில் டூவீலர்களைத் திருடும் இரண்டு சிறுவர்கள் அதை பொதுக் கழிப்பிடத்தில் மறைத்துவைத்துள்ளனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிந்து அவர்களிடமிருந்து ஆறு டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் உள்ள ரயில்வே குடியிருப்பில் மணி என்பவர் குடியிருந்துவருகிறார். இவர், ரயில்வேயில் எலெக்ட்ரீசியனாகப் பணியாற்றுகிறார். கடந்த 10-ம் தேதி மணி, தன்னுடைய டூவீலரை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுவிட்டார். காலையில் அவரது டூவீலர் காணவில்லை.

இதுகுறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மணியின் டூவீலரை வில்லிவாக்கம், புதுப்பேட்டையைச் சேர்ந்த 14 வயதுடைய இரண்டு சிறுவர்கள் திருடியது தெரியவந்தது. இவர்கள் இருவரும் டூவீலர்களைத் திருடி எழும்பூர் லாங்ஸ்கார்டன் ரோட்டில் பொதுக் கழிப்பிடத்தில் பதுக்கி வைத்து அதை விற்பது வழக்கம். இவர்களிடமிருந்து ஆறு டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து இரண்டு சிறுவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். 

சிறுவர்கள் டூவீலர்கள் திருடும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.