வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (14/04/2018)

கடைசி தொடர்பு:16:10 (14/04/2018)

பொதுமக்களின் குறைகளைக் கேட்க சிறப்பு முகாம்கள்..! தம்பிதுரை அறிவிப்பு

 

கரூர் மாவட்டத்திலுள்ள 157 ஊராட்சிகளிலும் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.  

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அனைத்து அரசுத்துறை பணிகளின் மேம்பாடு குறித்து நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயாபாஸ்கர் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். 

இந்த ஆய்வுக்கூட்டத்தில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தெரிவித்ததாவது, 'மக்கள் நலன் காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைத் தீட்டி அதற்காக நிதிகளை ஒதுக்கி வருகிறது. அவ்வாறு ஒதுக்கப்படும் நிதிகள் பல்வேறு துறைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு நலத்திட்டமாகவும், மானியமாகவும் சென்றடைகிறது. இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் செயல்படுத்துவது அனைத்து கடைக்கோடி பொதுமக்களுக்கும் சென்றடையும் வகையில் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதுடன் பயனடையவும் வைக்க வேண்டும். அனைத்துத்துறை மூலமாக செயல்படும் நலத்திட்ட உதவிகள் ஆண்டுதோறும் ஒவ்வொரு கிராமத்தில் எவ்வளவு பயனாளிகள் எவ்வளவு பயன்பெற்றனர் என்ற விவரங்களை அரசு அலுவலர்கள் துறை வாரியாக கணக்கு வைத்திருக்க வேண்டும். மேலும், கரூர் மாவட்டத்திலுள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 157 ஊராட்சிகளில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் குறை கேட்கும் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டள்ளது. இதன் மூலம், பொதுமக்களின் தேவைகளை அறிந்து மாவட்ட நிர்வாகம் செயல்படும்' என்றார்.