வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (14/04/2018)

கடைசி தொடர்பு:16:30 (14/04/2018)

குற்றாலம் அருவில் கொட்டும் தண்ணீர்! சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்யும் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளது, அதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்யும் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளது, அதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

குற்றாலம் மெயின் அருவி

வெப்பச் சலனத்தின் காரணமாக நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் விழத் தொடங்கியுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் கொட்டுகிறது. புலியருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளிலும் அதிகமாக தண்ணீர் விழுகிறது. 

கடந்த வாரத்தில் கோடையின் வெப்பத்தால் மக்கள் சாலைகளில் நடமாடவே அஞ்சும் நிலைமை இருந்த நிலையில் தற்போது பெய்த மழையால் உஷ்ணத்தின் தாக்கம் மறைந்துவிட்டது. மாவட்டம் முழுவதும் இதமான சூழ்நிலை நிலவுகிறது. தென்காசி, செங்கோட்டை  மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. மிதமாக காற்று வீசுவதாலும் அருவிகளில் தண்ணீர் கொட்டுவதாலும் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரத் தொடங்கியுள்ளனர்.

மெயின் அருவியில் மக்கள் கூட்டம் அதிகரித்தபடியே இருக்கிறது. புலியருவியில் தண்ணீர் விழுந்த போதிலும், கூட்டம் அதிகமாக இல்லாததால் அங்கு குளிக்கும் பயணிகள் உற்சாகத்துடன் நீண்ட நேரம் குளித்து மகிழ்கிறார்கள். பழைய குற்றால அருவியிலும் கூட்டம் குறைவாகவே உள்ளது. வார விடுமுறை மற்றும் கோடை விடுமுறையைக் கொண்டாட வந்துள்ள சுற்றுலாப் பயணிகளை கோடை மழை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.