வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (14/04/2018)

கடைசி தொடர்பு:20:00 (14/04/2018)

பாட்டில் குடிநீரின் தரத்தை தெரிந்துகொள்ள இணையதளம்..! கரூரில் அசத்தல் முயற்சி

இன்று பாட்டில், கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை வாங்கி அருந்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். அப்படிப்பட்ட அந்த கேன் வாட்டர் எந்தளவு சுகாதாரம்மிக்கதாக உள்ளது என்பதை மக்கள் அறிந்துகொள்வதில்லை. அப்படி அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களிலுள்ள குடிநீரின் தரத்தைப் பொதுமக்கள் தெரிந்துகொள்ள கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்துள்ளார்.

 

இதுபற்றி, கரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்  (Packaged Drinking Water) நிறுவனங்களில் தயாரிக்கப்படும் குடிநீரின் தரத்தை, பொதுமக்கள் தாங்களாகவே தெரிந்துகொள்ளும் வண்ணம், உணவு பாதுகாப்புத் துறையின் இணையதளமான https://safewater.fssai.gov.in/CleanWater/home என்ற இணையதளத்தில் குடிநீரில் உற்பத்தியாளர்களின், ISI எண் அல்லது உணவு பாதுகாப்பு உரிமம் எண்ணை (FSSAI) உள்ளீடு செய்து, மேற்படி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட குடிநீரின் 6 மாதம் மற்றும் 1 வருட பரிசோதனை அறிக்கை மற்றும் அவர்களின் ISI மற்றும் FSSAI எண் கால அவகாசம், பயன்பாடு போன்ற விவரங்களை பொதுமக்கள் பார்வையிட்டு, குடிநீரின் தரத்தை அறிந்துகொள்ளலாம்.

மேலும், பொதுமக்கள் வாங்கும் ஒவ்வொரு தண்ணீர் பாட்டில்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் 20 லிட்டர் கேன்களிலும், அதன் தயாரிப்பாளர் ISI எண் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை FSSAI உரிமம் எண் இரண்டையும் கட்டாயம் பதிவிட்டிருக்க வேண்டும். இந்த இரண்டு எண்களில் ஏதேனும் ஒரு எண்ணை மட்டும் வைத்துக்கொண்டு, இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி, அங்குள்ள செயலியில் குடிநீர் நிறுவனத்தின் பெயரை பதிவேற்றம் செய்தால் அந்த நிறுவனத்தின் ISI தரம் FSSAI தரம் தற்போது செயல்பாட்டில் உள்ளதா? என்ற விவரங்கள் வரும். இந்த நிறுவனத்தின் தண்ணீர் ஆய்வக அறிக்கையையும் தாங்கள் பரிசீலித்து அறிந்துகொள்ள உணவு பாதுகாப்புத் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. மேலும், இதுகுறித்து ஏதேனும் புகார்கள் இருந்தாலோ அல்லது மற்ற உணவுப் பொருள்கள் குறித்து புகார்கள் இருந்தாலோ எங்களது வாட்ஸ்அப் புகார் எண் 9444042322 என்ற இந்த எண்ணுக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.