வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (14/04/2018)

கடைசி தொடர்பு:17:25 (14/04/2018)

சென்னையில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம் 

பாலியல் வன்கொடுமை

சென்னையில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி மாணவியை வெளியூருக்கு அழைத்துச் சென்ற வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரைக் கைதுசெய்தனர்.

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 17 வயதாகும் மாணவி தரப்பில் புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதில் `சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த கர்ணன், தன்னை காதலித்தார். திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, வெளியூருக்கு அழைத்துச் சென்றார். தற்போது அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிகிறது. எனவே, என்னை ஏமாற்றிய கர்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தது.  

 புகாரின்பேரில் புளியந்தோப்பு மகளிர் போலீஸார் சம்பந்தப்பட்ட கர்ணனிடம் விசாரணை நடத்தினர். அதன்பிறகு பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டம் 2012 - ன்படி வழக்கு பதிவு செய்து கர்ணனை கைதுசெய்தனர். அதன்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "மாணவியின் எதிர்காலம் கருதி அவரது பெயர் வெளியிடப்படவில்லை. மாணவியும் கர்ணனும் காதலித்துள்ளனர். மாணவியை வெளியூருக்கு அழைத்துச் சென்ற கர்ணன் அவரிடம் அத்துமீறி நடந்துள்ளதாக மாணவி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில்தான் கர்ணன் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றனர். 

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.