வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (14/04/2018)

கடைசி தொடர்பு:19:40 (14/04/2018)

பொதுமக்கள் கோரிக்கைக்கு உடனடி தீர்வு..! அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெருமிதம்

 

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் சம்மந்தமாக உரிய அலுவலர்களிடம் உடனே பேசி பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படுத்தப்படுகிறது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் நகராட்சி பகுதிகளில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில், பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், ``மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள், மக்களோடு மக்களாக இருந்து செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில், மக்களைத் தேடி அரசு என்ற உன்னத நோக்குடன் மக்கள் இருப்பிடம் தேடிச் சென்று பொதுமக்களின் குறைகள், தேவைகள் மனுக்களாக பெற்று உடனடியாக நிவர்த்தி செய்யப்படுகிறது. பெரும்பாலும் குடிநீர், மின்விளக்கு தொடர்பாக மனுக்கள் வரப்பெறுகின்றன. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு உடனடி தீர்வு செய்யப்படுகிறது. மேலும், 30-வது வார்டு பகுதியில் 1.50 கோடி ரூபாய் மதிப்பிலும், 31-வது வார்டில் ரூ.1.75 கோடி மதிப்பிலும், 32-வது வார்டில் ரூ.7.50 கோடி மதிப்பிலும், 37-வது வார்டில் ரூ.1.75 கோடி மதிப்பிலும் வளர்ச்சித்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், பசுபதிபாளையம் மற்றும் குளத்துப்பாளையம் பகுதியில் ரூ.13.60 கோடி மதிப்பில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குகை வழிச்சாலை அமைக்கப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. ரூ.68 கோடி மதிப்பில் காவிரி குடிநீர் திட்டப்பணிகள் முடிவுற்று பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ரூ.268 கோடி மதிப்பில் 700 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது'' என்று தெரிவித்தார்.