வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (14/04/2018)

கடைசி தொடர்பு:20:20 (14/04/2018)

பொதுமக்களிடம் அதிக பணம் வசூலிக்கிறார்கள்..! அ.தி.மு.க பிரமுகர்கள் மீது தி.மு.க பிரமுகர் புகார்

வாரச்சந்தை, சைக்கிள் ஸ்டாண்ட், ஆடு வதைக்கூடம் ஆகியவற்றில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூல் செய்வதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளார் சிவகங்கை மாவட்ட தி.மு.க நகரச் செயலாளர் துரை ஆனந்த்.

சிவகங்கை திமுக துரை ஆனந்த்

இதுகுறித்து அவரிடம் பேசியபோது, 'சிவகங்கை நகரில் வாரச்சந்தை மற்றும் ஆட்டுச்சந்தை, இருசக்கர வாகன காப்பகம், ஆடு வதை நிலையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இவைகள் அனைத்தும் ஆளும் அ.தி.மு.க நிர்வாகிகள் டெண்டர் (குத்தகை) எடுத்து அடாவடித்தனமாக அதிக அளவில் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும்  பணம் வசூல் செய்து வருகின்றனர். வாரச் சந்தைக்கு வரும் விவசாயிகள், வியாபாரிகள் குத்தகைதாரர்களால் துன்புறுத்தப்படுவதோடு, அதிக கட்டணம் வசூல் செய்து வருகிறார் முன்னாள் கவுன்சிலரான முத்துப்பாண்டி. 

பழைய நகராட்சி முன்பாக இயங்கி வரும் சைக்கிள் ஸ்டாண்ட்டை நடத்தி வருபவர் முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலர் மாரிமுத்து. இவர் ஒரு நாளைக்கு சைக்கிள் நிறுத்துவதற்கான வாடகை ரூ.3-க்குப் பதிலாக ரூ.10 வரைக்கும் வசூல் செய்து வருகிறார். அதோடு இல்லாமல் ரோட்டில் நிற்கும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்து வருகிறார். அதையும் மீறும் வாகனங்களை இவரே சென்று பஞ்சர் செய்து வருகிறார். இந்தக் காட்சி பக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் பதிவாகி செய்தியாகியிருக்கிறது. இதையெல்லாம் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. ஆளும் கட்சியினர் என்பதால் இவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்தால்தான் சந்தையில், சைக்கிள் ஸ்டாண்டில், ஆடு வதைக்கூடத்தில் தொழில் செய்ய முடியும் என்கிற நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பியிருக்கிறார். மாவட்ட ஆட்சியர் லதா உரிய  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க