ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்று அசத்தும் 'குக்கிராம' அரசுப்பள்ளி..!

 

தமிழக அளவில் இதுவரை ஆறு பள்ளிகள்தான் ஐ.எஸ்.ஓ தரச்சான்றை பெற்றுள்ளன. அந்த ஐ.எஸ்.ஓ தரச்சான்றை பெறும் ஏழாவது பள்ளியாக இணைந்திருக்கிறது கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இந்த அரசுப்பள்ளியில் எண்ணற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒருபக்கம் மாடித்தோட்டம், இயற்கை காய்கறிகள் பயிடுதல், கீரைகள் என்று விவசாயம் நடக்கிறது. மற்றொருபுறம், பள்ளிவளாகம் முழுக்க வைபை வசதி, கம்ப்யூட்டர்கள். கரூர் மாவட்டத்திலேயே முதலாவதாக அமைக்கப்பட்ட ஏ.சி கிளாஸ் ரூம், ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள், மாணவர்களுக்கு கராத்தே உள்ளிட்ட தனித்திறமைகளை வளர்க்கும் கிளாஸ்கள் என்று ஏகப்பட்ட வசதிகளை செய்திருப்பதால், இந்தப் பள்ளி ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழை பெற்றிருக்கிறது. தமிழகத்தில் இதுவரை ஆறு பள்ளிகள்தான் இந்த ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழை பெற்றுள்ளன. கரூர் மாவட்டத்தில் இந்தச் சான்றை பெறும் இரண்டாவது பள்ளியாகவும் இது மாறி இருக்கிறது.

இந்தப் பள்ளி இந்த அளவுக்கு உயர்வதற்கு காரணமான பள்ளியின் ஆசிரியர் பூபதியிடம் பேசினோம். இதுகுறித்து தெரிவித்த அவர், 'இந்த வெற்றிக்குக் காரணம் பள்ளியின் தலைமை ஆசிரியர் கொடுத்த ஊக்கம்தான். அடுத்து, சக ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள், ஊர் மக்கள், மாணவர்கள்ன்னு எல்லோரோட கூட்டு முயற்சியால் இந்த ஐ.எஸ்.ஓ 9001-2015 தரச்சான்றிதழை பெற்றிருக்கிறோம். ஏற்கெனவே, இந்தத் தரச்சான்றிதழை பெற்ற க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன் சார் வழிக்காட்டுதலும் இதற்கு முக்கியக் காரணம். கரூர் மாவட்டத்தில் கடைக்கோடி கிராமத்தில் இருக்கிறது பொய்யாமணி. குக்கிராமமான இந்த ஊரில் வசிப்பவர்களில் அநேகம் பேர் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளையாவது, படிக்க வைத்து நல்ல நிலைமைக்குக் கொண்டு போக நினைக்கிறார்கள். அவர்கள் நினைத்ததை அடைய வைக்கதான், இந்தப் பள்ளியை எல்லா வகையிலும் சிறந்த பள்ளியாக மாற்றணும்ன்னு முடிவு பண்ணி, இரவு பகலா உழைச்சு, சென்னை ஸ்ரீராதாகிருஷ்ண சுவாமிஜி அறக்கட்டளை உள்ளிட்ட பலதரப்பு ஸ்பான்ஸர்கள் உதவியோடு, இப்படி பள்ளியை மாற்றினோம்.

 

'நாங்க சரியாகதான் போய்கிட்டு இருக்கோம்' என்பதை இந்த தரச்சான்றிதழ் கிடைத்திருப்பதின் மூலம் உணர்ந்துகொண்டோம். இன்னும் இந்தப் பள்ளியை இந்திய அளவில் சிறந்த பள்ளியாக மாற்றுவோம். அதற்காக, நாலு கால் பாய்ச்சலில் ஓடுவோம்" என்றார் உறுதியாக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!