கேரளாவில் டாக்டர்கள் ஸ்டிரைக்! - மருத்துவ சேவை முடங்கியதால் நோயாளிகள் அவதி!

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளதால், நோயாளிகளுக்கு மருத்துவ சேவை கிடைக்காமல் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் செய்து வருவதால் நோயாளிகளுக்கு மருத்துவ சேவை கிடைக்காமல் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 

டாக்டர்கள் ஸ்டிரைக் - நோயாளிகள் அவதி

கேரளாவில் கடந்த 2016 நவம்பர் மாதம் ’ஆதர்ம்’ என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, மருத்துவ சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் மாலை வரையிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இதை கேரள மருத்துவர்கள் சங்கம் எதிர்த்தது. மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமே, தவிர கூடுதல் நேரத்தை அமல்படுத்தக் கூடாது என அரசு மருத்துவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில், கூடுதல் நேரம் பணியாற்ற மறுத்த பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஜிஸ்மி என்ற மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைக் கண்டித்தும் கூடுதல் நேரம் பணியாற்ற மறுப்புத் தெரிவித்தும் கேரளா முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 

மருத்துவ சேவை முடக்கம்

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தவிர அனைத்து மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு செயல்படாததால், நோயாளிகள் கூட்டம் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் அலைமோதியது. ஏற்கெனவே சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களைத் தவிர, புதிய நோயாளிகள் சேர்க்கப்படவில்லை. 

அவசர சிகிச்சைக்காக வந்த நோயாளிகள்கூட, தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் கூட்டம் அலைமோதுவதுடன், உரிய சிகிச்சை கிடைக்காததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனிடையே, அரசு மருத்துவர்களின் இந்தப் போராட்டம் நியாயமற்றது என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா குற்றம் சாட்டியுள்ளார். அரசு மருத்துவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்தப் போராட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டுள்ள அவர், தொடர்ந்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கை எடுப்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்றும் தெரிவித்துள்ளார். அரசு டாக்டர்களின் ஸ்டிரைக் காரணமாக கேரளாவில் சுகாதாரப் பணிகள் முழுமையாக முடங்கிப் போயிருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!