வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (14/04/2018)

கடைசி தொடர்பு:20:40 (14/04/2018)

`நீச்சல் பழகலாம் வாங்க!' - ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அழைப்பு

ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்படும் கோடை கால நீச்சல் பயிற்சியில் சேர்வதற்கான  அழைப்பினை  மாவட்ட ஆட்சியர் நடராஜன் விடுத்துள்ளார்.

 ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்படும் கோடை கால நீச்சல் பயிற்சியில் சேர்வதற்கான  அழைப்பை  மாவட்ட ஆட்சியர் நடராஜன் விடுத்துள்ளார்.

நீச்சல் பழகலாம் வாங்க...

தமிழகத்தின் நீண்ட கடற்கரை பகுதியை ராமநாதபுரம் மாவட்டம் கொண்டிருக்கிறது. ஆனாலும் கடற்கரையோர பகுதிகள் வசிக்கும் குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு நீச்சல் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு குறைந்த அளவே உள்ளது. அதிலும் நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் கல்வி, வேலை, நேரமின்மை போன்ற காரணங்களால், அவர்களுக்கு நீச்சல் பயில்வது என்பது எட்டாக்கனியாகத்தான் இருந்து வருகிறது. இந்தநிலையினைப் போக்கும் வகையிலும், நீச்சல் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும் கோடை கால நீச்சல் பயிற்சி முகாமை மாவட்ட நிர்வாகம் ராமநாதபுரத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ராமநாதபுரம் மாவட்டப் பிரிவின் கீழ் இயங்கும் நீச்சல் குளத்தில் கோடை கால நீச்சல் பயிற்சிகள் துவங்க உள்ளன. இந்தப் பயிற்சிகள் ஏப்ரல் 17-ல் துவங்கி ஜூன் 30 வரை 5 கட்டங்களாக நடைபெற உள்ளன. ஒவ்வொரு கட்டத்திலும் 12 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும். இந்த நாள்களில் காலை 7 மணிக்குத் துவங்கி 10.30 மணி வரை, 4 பிரிவுகளாகவும், மாலையில் 4.30 மணிக்குத் துவங்கி 6.30 மணி வரையிலும் 2 பிரிவுகளாகவும் நீச்சல் கற்றுத்தரப்பட உள்ளன. இவைதவிர பயிற்சி நாள்களில் பகல் 11 முதல் 12 மணி வரை பெண்களுக்கு மட்டும் நீச்சல் கற்றுத்தரப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

12 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினமும் ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி பெற ரூ.1200 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த முகாமில் திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள்களில் பயிற்சி அளிக்கப்படாது. விடுமுறை நாள்களை ஈடு செய்யும் வகையில் நீச்சல்  பயிற்சி மாற்று நாளில் தொடர்ந்து அளிக்கப்படவும் உள்ளது. இந்திய விளையாட்டு குழுமத்தால் தேர்ச்சி பெற்ற நீச்சல் பயிற்சியாளர் ராஜேஸ் சிறப்பான முறையில் நீச்சல் பயிற்சி அளிக்க உள்ளார். நீச்சல் கற்றுக்கொள்ள ஆர்வம் உடைய 6 வயதுக்கு மேற்பட்டவர்கள் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கம், மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் நீச்சல் பயிற்சியாளரை  04567-230238,7401703509, 9840356223 எண்களில் தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளலாம். நீச்சல் பயிற்சிக்கு வரும் சிறுவர்களின் குறைந்த பட்ச உயரம் 4 அடி இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.