Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``திரைத்துறையில் 40 ஆண்டுகள்... விஜயகாந்துக்கு விழா எடுக்கும் ரசிகன்!"

திரைத்துறையில் விஜயகாந்த் கால்பதித்து 40 ஆண்டுகள் ஆகின்றன. அதற்காக தே.மு.தி.க சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பையில் 40-ம் ஆண்டுவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகின்றன.

விஜயகாந்த் 40வது ஆண்டுவிழா, படப்பை

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பிரேமலதா விஜயகாந்த் நேற்று மாலை பார்வையிட்டார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அனகை முருகேசன்“கலைத்துறையில் கேப்டனுக்கு 40-வது ஆண்டுவிழா கொண்டாட வேண்டும் என்பது காஞ்சி மாவட்டச் செயலாளர் முருகேசனின் நீண்டநாள் ஆசை. இப்போது வேண்டாம், பிறகு பார்க்கலாம் எனக் கேப்டன் சொன்னபோதும், எப்படியோ ஒருவழியாக அனுமதி பெற்று விழாவுக்கான ஏற்பாடுகளை தீவிரமாகச் செய்து வருகிறார். இந்த விழா நடைபெறுவதற்கு முழுக் காரணம் முருகேசன்தான். 15-ம் தேதி காலை 11 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி, இரவு 8 மணிவரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 11 மணிமுதல் மாலை 5 மணிவரை கட்சி நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன்பிறகு விஜயகாந்த் பற்றிய வாழ்க்கை வரலாறு வீடியோ ஒளிபரப்பப்பட இருக்கிறது. அதைத் தொடர்ந்து திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் விஜயகாந்த் பற்றி பேசுவார்கள்.” என்றார். 

அதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் முருகேசனிடம் பேசினோம். “நான் சின்ன வயசுல இருந்தே கேப்டனோட தீவிர ரசிகன். மதுரையில் பள்ளிப் படிப்பை முடிச்ச கையோட கீழமாசி வீதியில் ஒரு மளிகைக் கடையில் வேலை செய்துகொண்டிருந்தேன். அப்போது மதுரையில் அகில இந்திய விஜயகாந்த் ரசிகர் மன்றத்தைத் தொடங்கினேன். ‘தூரத்து இடிமுழக்கம்’ படத்திலிருந்தே விஜயகாந்தைப் பிடிக்கும் என்றாலும், ‘சிவப்பு மல்லி’ படத்தில் ஒரு கம்யூனிஸ்ட்டாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அப்போதிலிருந்து தீவிர ரசிகனாகிவிட்டேன். விஜயகாந்தின் தந்தை இறந்தபோது விஜயகாந்த் வருவார் என நான் மளிகைக் கடையில் சாமான்களைப் போட்டுவிட்டு விஜயகாந்த் வீட்டுக்கு ஓடோடி வந்தேன். அழகர்சாமியின் உடலைக் கொண்டுசெல்லும்போது அந்த சவ ஊர்வலத்தின் பின்னாலேயே 15 கி.மீ நடந்து வந்தேன்.

விஜயகாந்த் 40வது ஆண்டுவிழா ஏற்பாடுகள்

சென்னையில் உள்ள குன்றத்தூரில் குடிபெயர்ந்த பிறகு அங்கேயும் ஒரு ரசிகர் மன்றத்தைத் தொடங்கினேன். தென்சென்னையில் தேவிகனி என்பவர் மாவட்டத் தலைவராக இருந்தார். விஜயகாந்த் படப்பிடிப்பு நடக்கும்போது நாங்கள் பார்க்க வருவோம். அங்கு எங்களை அனுமதிக்க மாட்டார்கள். தூரத்திலிருந்தே அதோ விஜயகாந்த் எனக் காட்டுவார்கள். விஜயகாந்தை நேரடியாக சந்திக்க வேண்டும் என்பது அப்போதைய ஆசையாக இருந்தது. ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக அளவில் கிளை ரசிகர் மன்றங்களைத் திறந்தேன். எனது தீவிரமான வேலையைப் பார்த்து தாம்பரம் தொகுதி பொறுப்பாளர், காஞ்சிபுரம் மாவட்டப் பொறுப்பாளர், மாவட்டத் தலைவர், தலைமை நிலையச் செயலாளர் எனப் படிப்படியாக கேப்டன் எனக்கு பொறுப்புகளைக் கொடுத்தார். அதன்பிறகு மாநில நிர்வாகிகளோடு சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் மன்றங்களைத் தொடங்கினோம். விஜயகாந்த் சினிமாத்துறையில் பிஸியாக இருந்தபோது அரசியல் நிகழ்ச்சியாக முதன் முதலாக நலத்திட்ட உதவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனகாபுத்தூரில்தான். விஜயகாந்துக்கு திருமணம் ஆனபிறகு எங்கள் குடும்ப நிகழ்ச்சியில்தான் முதன்முதலாக பிரேமலதா கலந்துகொண்டார். 23 வருடத்துக்கு முன்பு விஜயகாந்த் பிறந்தநாளின்போது 3 லட்ச ரூபாயில் நலத்திட்ட உதவிகள் செய்தோம். அப்போதுதான் விஜயகாந்தை நேரடியாக சந்தித்தேன். அதன் பிறகே அவருக்கு நம்பிக்கைக்குரிய ஒருவராக வலம்வரத் தொடங்கினேன்.

கலைத்துறையில் 40 வருடமாக யாரும் செய்யாத சாதனைகளை விஜயகாந்த் செய்துள்ளார். ஒரு சினிமா நடிகராக தான் சம்பாதித்ததில் ஒரு பெரும்பகுதியை எல்லோருக்கும் கொடுத்து உதவி இருக்கிறார். ‘கேப்டன் பிரபாகரன்’ நூறாவது நாளுக்கு விழா கொண்டாட வேண்டும் என முடிவெடுத்தோம். நூறாவது நாளைக் குறிப்பிடும் வகையில் 100 சவரன் நகை போடத் திட்டமிட்டோம். ஆனால், அவ்வளவு செலவு செய்ய எனக்கு வசதி இல்லாமல் போனது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ‘மக்களுக்காக மக்கள் பணி’ நிகழ்ச்சியில் 72 சவரன் நகை அணிவித்தேன். நீண்ட வருடங்களுக்கு பின் அப்போதுதான் என் ஆசை நிறைவேறியது.

விஜயகாந்த் 40வது ஆண்டுவிழா, படப்பை

அதுபோல்தான் இப்போதும் அவருக்கு விழா எடுக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. எத்தனையோ சிறந்த நடிகர்களையும், டைரக்டர்களையும் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் விஜயகாந்த். ஆனால், திரைத்துறையில் அவருக்கு ஒரு விழா எடுக்கவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு இருந்தது. இதனால் ஒரு ரசிகனாக இருந்து நான் அவருக்கு விழா எடுக்க ஆசைப்பட்டேன். இதை விஜயகாந்திடம் சொன்னபோது, ‘வேண்டாம் முருகேசா… இப்ப எதுக்கு இந்த விழா. தேவையில்லாம செலவு செய்ய வேண்டாம்’னு சொன்னார். ஆனாலும் தொடர்ந்து நான் வற்புறுத்தவே வேறுவழியில்லாமல் சம்மதித்தார்.

நடிகர் நடிகைகள், டைரக்டர்கள் என திரைத்துறையைச் சேர்ந்த அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். இன்றைக்கு ஒன்றுமே செய்யாதவர்கள் எல்லாம் திரைத்துறையிலும், அரசியலிலும் சாதனை படைத்ததைப்போல காட்டிக்கொள்கிறார்கள். திரைத்துறையில் சாதனையாளரான விஜயகாந்துக்கு ஒரு ரசிகனாக விழா எடுப்பதைவிட வேறு என்ன சந்தோஷம் வேண்டும்?” என்கிறார், முருகேசன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement