வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (14/04/2018)

கடைசி தொடர்பு:17:10 (14/04/2018)

திருமணம் செய்ய மாணவியைக் கடத்திய மூன்று குழந்தைகளின் தந்தை - சினிமாவை விஞ்சிய சம்பவம்

சிறுமி கடத்தல்

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியை சினிமாவைப் போல மூன்று குழந்தைகளின் தந்தை வலுக்கட்டாயமாக கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு 16 வயதில் ராசாத்தி (பெயர் மாற்றம்) என்ற மகள் உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன், ராசாத்தியை திருமணம் செய்துகொள்ள விரும்பியுள்ளார். இதற்காக முருகனிடம் பெண்ணும் கேட்டுள்ளார். அப்போது, முருகனின் மனைவி, 'உனக்கு ஏற்கெனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. உன் மகளே என் மகளைவிட இரண்டு வயது மூத்தவள்' என்று மணிகண்டனைத் திட்டியுள்ளார். இருப்பினும் ராசாத்தியை திருமணம் செய்துகொள்ளும் முடிவிலிருந்து மணிகண்டன் மனம் மாறவில்லை. இந்த நிலையில், கடந்த ஆண்டு மாணவி ராசாத்தியை முருகன் கடத்திச் சென்றார். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் நீதிமன்றத்திலும் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனால், ராசாத்தியையும் மணிகண்டனையும் போலீஸார் மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். 

இதையடுத்து மணிகண்டனை போலீஸார் சிறையில் அடைத்தனர். ராசாத்தி அரசு காப்பகத்துக்கு அனுப்பப்பட்டார். பிறகு, ராசாத்தியை முருகன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். மணிகண்டன் மீது ஏற்கெனவே வழக்குகள் நிலுவையில் இருந்ததால் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் ஓராண்டு சிறைக்குள் மணிகண்டன் அடைக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் சிறையிலிருந்து வெளியில் வந்த மணிகண்டன், கடந்த மார்ச் 28-ம் தேதி ராசாத்தியை சினிமாவில் வரும் காட்சி போல அதிகாலை நேரத்தில் காரில் கடத்தினார். இதையடுத்து சிவகங்கை மாவட்ட காவல்துறையிடம் முருகன் மீண்டும் மகளை மணிகண்டன் கடத்திவிட்டதாக புகார் கொடுத்தார். அதன்பேரில் ராசாத்தியையும் மணிகண்டனையும் போலீஸார் தேடிவருகின்றனர். இவர்களின் விவரங்களை சிவகங்கை மாவட்ட காவல்துறை பொது அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. அதில், சிறுமியைக் கடத்திய மணிகண்டன் குறித்த தகவல்கள் தெரிந்தால் காவல்துறைக்கு உடனே தெரிவிக்கும்படி வேண்டுகோளும் விடுத்துள்ளது. அந்த அறிவிப்பில் காவல்துறையின் எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராசாத்தியை போலீஸார் தமிழகம் முழுவதும் தீவிரமாக தேடிவருகின்றனர். இருப்பினும் ராசாத்தி குறித்த எந்த தகவலும் போலீஸாருக்கு கிடைக்கவில்லை. 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மீது  கொலை வழக்கு, ஆள்கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மணிகண்டன் டிரைவராகப் பணியாற்றினார். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. மூத்த மகள், பிளஸ் 2 படிக்கிறார். முருகனின் தூரத்து உறவினரான மணிகண்டன், ராசாத்தியை இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டுள்ளார். இதனால் ராசாத்தி குடும்பத்தினருக்கும் மணிகண்டனுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் ராசாத்தியை முருகன் தொடர்ந்து கடத்திவருகிறார். முதல் முறை ராசாத்தியை மணிகண்டன் கடத்தியபோது அவரைக் கைதுசெய்தோம். மேலும், குண்டர் சட்டத்திலும் அவரை ஓராண்டு சிறையில் அடைத்தோம். ஆனால், சிறையிலிருந்து வெளியில் வந்த மணிகண்டன், மீண்டும் ராசாத்தியைக் கடத்திச் சென்றுவிட்டார். தற்போது அவர் பதுங்கியிருக்கும் இடம் தெரியவில்லை. ராசாத்தியைக் கடத்திய மணிகண்டனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று மாணவி ராசாத்தியை தேடிவருகிறோம்" என்றனர். 

 சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஜெயசந்திரனிடம் பேசினோம். "மாணவி கடத்தல் சம்பவத்தில் துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். ஏற்கெனவே மாணவி கடத்தப்பட்டபோது அவரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தோம். அந்த வழக்கில் மணிகண்டனை கைதுசெய்தோம். இந்த தடவை போலீஸாருக்குப் பயந்து அவர் தலைமறைவாகிவிட்டார். மணிகண்டனின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் விசாரித்து வருகிறோம். விரைவில் மாணவியை மீட்டு மணிகண்டன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

ராசாத்தியைக் கடத்திய மணிகண்டன், போலீஸாருக்கு பலவகையில் டிமிக்கி கொடுத்துவருகிறார். அவர், தலைமறைவாக இருக்கும் இடம் குறித்த விவரங்கள் போலீஸாருக்கு தெரிந்துவிடாமல் முன்எச்சரிக்கையாக செயல்பட்டுவருகிறார். கடந்த மார்ச் 28-ம் தேதி முதல் மாணவி ராசாத்தி எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியாமல் சிவகங்கை போலீஸார் விழிப்பிதுங்கிவருகின்றனர். மாணவியைக் கண்டுபிடிக்க சிவகங்கை மாவட்ட போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மாணவியை மணிகண்டன் சிறை வைத்துள்ள சம்பவம் சிவகங்கை மாவட்ட போலீஸாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்தில் காஷ்மீர் சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் இந்தியாவையே உலுக்கிவரும் நேரத்தில் சிவகங்கை மாவட்ட மாணவிக்கு நேர்ந்துள்ள கொடூரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவி ராசாத்தியை மீட்க தமிழக காவல்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.