வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (14/04/2018)

கடைசி தொடர்பு:18:40 (14/04/2018)

கடன் கேட்டவருக்கு ரூ.25 கோடி பழைய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்த முன்னாள் எம்.எல்.ஏ!

செல்லாத ரூபாய் நோட்டுக்கள்

கடன் கேட்டவருக்கு 25 கோடி மதிப்பிலான செல்லாத ரூபாய் நோட்டுகளை முன்னாள் எம்.எல்.ஏ. கொடுத்தனுப்பியதாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை தி.நகர் பகுதியில் தனியார் நிறுவனம் நடத்திவருபவர் மிதுதாம்ஸ். இவர், பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ``எனக்கு திடீரென பணத்தேவை ஏற்பட்டது. இதனால் என்னுடைய நண்பர் ஒருவர் மூலம் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரிடம் கடனாக பணம் கேட்டேன். அவர், தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. தற்போது அ.தி.மு.க.வில் உள்ளார். சில நாள்களுக்கு முன்பு 10 பைகளில் பணத்தை  தன்னுடைய ஆதரவாளர் ஒருவர் மூலம்  கொடுத்தனுப்பினார். அந்தப் பைகளைத் திறந்துபார்த்தபோது அதில் செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. . இதனால், அந்தப்பணத்தை திருப்பி அனுப்பிவிட்டேன். அதன் மதிப்பு சுமார் 25 கோடி ரூபாய் இருக்கும்.

ஆனால், 35 லட்சம் ரூபாயைக் கடனாக கொடுத்ததாகக்கூறி அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்னை மிரட்டி வந்தனர். அதற்கான வீடியோ ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் அவர்கள் என்னிடம் கூறினர். இந்த நிலையில், கடந்த 30.3.2018-ல் பணத்தைக் கேட்டு வந்தவர்கள் என்னை மிரட்டினர். அப்போது தகாத வார்த்தைகளால் என்னைத் திட்டிய அவர்கள் எனக்குக் கொலை மிரட்டலும் விடுத்தனர். மேலும், என்னுடைய நிறுவனத்தை அரசியல் செல்வாக்கால் மூடிவிடுவதாகவும் கூறினர். இதனால் எனக்கும் அவர்களுக்கும் கடும் தகராறு ஏற்பட்டது. எனவே, என்னை மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை மிரட்டியவர்களில் ஒருவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர்" என்று குறிப்பிட்டிருந்தார்.

 இந்த புகாரின்பேரில் விசாரணை நடத்தி வெங்கடேஷ், சந்தோஷ், சீனிவாசன் என மூன்று பேரை போலீஸார் பிடித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய  முன்னாள் எம்.எல்.ஏ.,  தன்னுடைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி போலீஸ் உயரதிகாரியின் தயவால் நடவடிக்கையிலிருந்து தப்பிவிட்டார். 

 அ.தி.மு.க. பிரமுகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஒருவர் கோடிக்கணக்கில் செல்லாத ரூபாய் நோட்டுகளை கடனுக்காக கொடுத்தனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.