வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (14/04/2018)

கடைசி தொடர்பு:20:15 (14/04/2018)

பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு! 'சவால்' வழக்குப் பின்னணி என்ன?

பாலிடெக்னிக் தேர்வு

ரசு  பாலிடெக்னிக் கல்லூரித் தேர்வில் முறைகேடு குறித்த விசாரணை, ஐந்து மாதங்களாகியும் சூடுகுறையாமல் போய்க்கொண்டு இருக்கிறது. 'கல்வி தொடர்பான குற்றத்தில் ஈடுபட்ட ஒருவரைக்கூட, வெளியில் விட்டு விடக் கூடாது'  என்ற உறுதியை விசாரணையின் தீவிரம் உணர்த்துகிறது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கு, கடந்த ஆண்டு செப்டம்பரில் 'ஆசிரியர் தேர்வு வாரியம்' தேர்வு நடத்தி, பிரம்ம நாயகம்முடிவுகளை அறிவித்தது. அப்போது, ' தேர்வில் முறைகேடு நடந்திருக்கிறது, இதை  விசாரிக்க வேண்டும்' என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் -செயலர் உமா, சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் எம்.டி. கணேசமூர்த்தியின் நேரடி மேற்பார்வையில் துணை கமிஷனர் எஸ்.ஆர். செந்தில் குமார் விசாரணையைத் தொடங்கினார். செப்டம்பர்  2017-ல் தொடங்கி, தற்போது (ஏப்ரல் 2018)வரை, நாளுக்கு ஒருவர் என்ற கணக்கில், இந்த வழக்கில் கைதாகி வருகின்றனர்.

...இப்படியே போய்க்கிட்டு இருந்தா என்னாவறது, இதுக்கு ஒரு 'என்டே' இல்லையா?... என்ற  கேள்வி நம்மிடம் எழாமல் இருக்குமா ? ஆம், அதே கேள்வியைத்தான் விசாரணை டீமில் இருந்தவர்களிடம் கேட்டோம். 

" இந்த வழக்கின் ஆரம்பநிலையிலேயே குற்றவாளிகளின்  'நெட்-வொர்க்'  பற்றித் தெரிந்து விட்டது. நெருங்கிப்போகும்போதுதான், அது ’பெரிய நெட்வொர்க்’ எனத் திணறவைத்தது. ஆனாலும் எங்களின் அடுத்தடுத்த நடவடிக்கைகளில், வழக்கில் தொடர்புள்ளவர்கள்  சிக்கினார்கள். போலீஸ் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.கள், தலைமைக் காவலர்கள் என ஸ்பெஷல் டீம் உருவாக்கப்பட்டது. வழக்கில் முதல் நபராக சென்னை முகப்பேர் கணேசன், கடந்த டிசம்பர் 12-ம் தேதி பிடிபட்டார். இரண்டாவதாக, ரகுபதி, சுரேஷ்பால் ஆகியோர், கடந்த ஜனவரி 13-ம் தேதி பிடிபட்டனர்.  

'தேர்வு நடைமுறையின் மோசடி உத்திகளுக்கு  மூளை' என்று வர்ணிக்கப்பட்ட  ஷேக்தாவூத் நாஸர் எங்களிடம் சிக்காமல், பொன்னேரிகுணசேகரன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த மாதம் 13-ம் தேதி கைதான பிரம்மநாயகம், குணசேகரன் ஆகியோரோடு சேர்த்து,  இதுவரை 13 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.  இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உத்தியில் கைதேர்ந்தவர்கள்.  ஒவ்வொரு டெக்னிகல் ஏரியாவிலும் தொடர்ந்து ட்ராவல் செய்துள்ளனர், குற்றங்களில் இவர்களின் பங்களிப்பு அசாத்தியமானது. குற்றவாளிகளில் பாதிபேர்தான் இதுவரை மாட்டியுள்ளனர், பெரிய முதலைகள் இன்னும் சிக்கவில்லை; அதற்காகவே சேஸிங் தொடர்கிறது" என்று கூறி அதிர வைக்கின்றனர். 

இந்த வழக்கில் கைதான 13 பேரில், சுரேஷ்பால், கணேசன், ஷேக்தாவூத் நாஸர், ரகுபதி, சின்னசாமி, விநாயகமூர்த்தி ஆகிய 6 பேர்  குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட  ஒரு வழக்கில் கைதான பாதிபேர் குண்டர் சட்டத்தில்  அடைக்கப்பட்டுள்ள வழக்கு இதுவாகத்தான் இருக்கும்.

இதேவேளையில், இந்த வழக்கில் மாட்டாமல் வெளியில் இருக்கும் 'சில' நபர்களின் பின்னால்,  முக்கிய அரசியல் புள்ளிகளின் தொடர்பு இருக்கிறது என்றும் அதிர்ச்சி தருகிறார்கள். இந்நிலையில், பாலிடெக்னிக்  விரிவுரையாளர் தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை அடுத்து 'ஆசிரியர் தேர்வு வாரிய'த்தைக் கலைக்கத் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. நடைபெற்றுள்ள முறைகேட்டில் தொடர்பிருக்கும் சில முக்கியப் புள்ளிகளைத் தப்பிக்க வைக்கவே இவ்வாறான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கி இருப்பதாகக் கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.


டிரெண்டிங் @ விகடன்