வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (14/04/2018)

கடைசி தொடர்பு:21:20 (14/04/2018)

`அம்பேத்கரை அனைத்து தரப்பினரும் கொண்டாட வேண்டும்!’ - பகுஜன் சமாஜ் கட்சி

அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

சேலத்தில் அம்பேத்கரின் 127வது பிறந்த நாள் இன்று கோலகலமாகக்  கொண்டாடப்பட்டது. சேலம் அரசு கலைக் கல்லூரி அருகே உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு சேலத்தின் பல பகுதியை சேர்ந்த அமைப்புகள், முற்போக்கு இயக்கங்கள், மாதர் சங்கங்கள் தாரை தப்பட்டையோடு வெடி சத்தங்கள் முழங்க அம்பேத்கர் புகைப்படங்களோடு ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தார்கள். இதனால் அப்பகுதி முழுவதும் கூட்ட நெரிசல் அதிகரித்தது. காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு போக்குவரத்து சீர் செய்து அனுப்பப்பட்டது.

அம்பேத்கர் திருவுருவ சிலை முன்பு கேக் வெட்டி கொண்டாடிய பகுஜன் சமாஜ் கட்சியின் சேலம் மாவட்டத் தலைவர் பார்த்திபன், ''அம்பேத்கர் பிறந்த தினம் எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத தினம். நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் தாரை தப்பட்டையோடு அண்ணல் அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தியவாறு ஊர்வலமாக வந்து அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தோம்.

இந்த மகிழ்ச்சியான தினத்தில் இன்னும் அம்பேத்கரை அறியாத மக்கள் இருக்கிறார்களே என்று நினைக்கின்ற போது வேதனையாக இருக்கிறது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கூட பெரும்பாலும் பட்டியலின மக்களின் அமைப்புகள் தான் அம்பேத்கர் விழாவை முன்னெடுக்கிறார்கள். மற்றவர்கள் அம்பேத்கரை ஒரு இனத் தலைவராக பார்த்து வருகிறார்கள். இந்தியாவில் உள்ள கடைக்கோடி ஏழை பாமர மக்களுக்கும் வாக்குச் சீட்டு உரிமையை வாங்கிக் கொடுத்த சமத்துவ நாயகன். பெண்களின் உரிமைகளுக்காகவும், பிறபடுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக இடஒதுக்கீடு வாங்கி கொடுத்த உத்தமர். அரசாங்கத்திற்கு எதிராக போராடும் உரிமையை வாங்கி கொடுத்தவர். இப்படி அம்பேத்கரை பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம்.

லண்டன் கேம்பிரிட்ஜ் நூலகத்தில் கார்ல்மார்க்ஸ், அம்பேத்கர் ஆகிய அறிவியலாளர்களின் படம் மட்டுமே வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவரை ஒரு சிறிய இனக் குழுவிற்குள் அடக்கி விட முடியாது. ஒட்டு மொத்த மனித குலத்திற்குமான போராளியாக அம்பேத்கர் திகழுகிறார். இன்று பா.ஜ.க. இந்தியாவை மதவாத நாடாக மாற்ற முயற்சித்து வருகிறது. ஆனால் அம்பேத்கர் தன்னுடைய அரசியல் சாசன சட்டத்தில் இந்தியா ஒரு மதச்சார்பின்மை நாடாக பிரகடனம் செய்து இருப்பதால், அனைத்து மக்களும் சமமாக சகோதரத்துவமாக வாழ வழிவகை செய்த பெருமை அம்பேத்கரையே சேரும். இப்படிப்பட்ட மனிதரின் பிறந்த நாளையும், நினைவு தினத்தையும் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாட வேண்டும்'' என்றார்.