`காஷ்மீர் சிறுமி படுகொலை!’ ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை

காஷ்மீர் சிறுமியின் மீதான பாலியல் வன்கொடுமையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை இந்திய அரசு நீதியின் கண்முன் கொண்டுவந்து நிறுத்தவேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் அந்தோணியா குட்டரெஸ் கூறியுள்ளார். 

காஷ்மீர் சிறுமி

குட்டரெஸின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீஃபன் டுஜர்ரிக்கின் வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவரிடம், இந்தப் பிரச்னை குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். சம்பவம் குறித்து கவலையை வெளிப்படுத்திய அவர், “காஷ்மீரின் பகர்வால் நாடோடிப் பழங்குடியினச் சிறுமியின் மீதான பயங்கரம் குறித்து செய்திகள் மூலமாக அறிய முடிந்தது. உரிய அரசு அமைப்புகள் குற்றவாளிகளை நீதியின் கண்முன் கொண்டுவந்து நிறுத்த வேண்டும். அதன் மூலம் இந்தச் சிறுமியின் கொலைக்குக் காரணமானவர்களைப் பிடிக்கமுடியும்” என்றார். 

கடந்த ஜனவரி 10ஆம் தேதியன்று காஷ்மீரின் கத்வா பகுதியில் வசிக்கும் அந்தச் சிறுமியைக் கடத்திய ஒரு கும்பல், அங்கிருக்கும் ஒரு கோயிலுக்குள் அடைத்து வைத்திருந்தது. கூட்டு வல்லுறவுக் கொடுமைக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட, ஏழு நாட்களுக்குப் பிறகு அருகிலுள்ள ரசானா எனும் வனப்பகுதியில் அந்தச் சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாள். இந்த விவகாரத்தில் அந்தக் கோயிலில் பணிபுரிபவர், எஸ்.ஐ. உட்பட 4 போலீஸார் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!