வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (14/04/2018)

கடைசி தொடர்பு:10:59 (03/07/2018)

`இதனால்தான் ஸ்டாலினைக் கருணாநிதி தி.மு.க.தலைவராக்கவில்லை!’ - ஹெச்.ராஜா உடைக்கும் ரகசியம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில்  கோடைக்கால தண்ணீர் பந்தலை திறக்க வந்த பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, திராவிடர் கழகம் ஆகிய கட்சிகளின் சார்பில் கறுப்புக் கொடி காட்டிய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் இரண்டு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


ஹெச்.ராஜா

பொன்னமராவதி பேருந்துநிலையம் முன்பு பா.ஜ.க. ஒன்றிய நகரத்தின் சார்பில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் வெயில் தாகம் தணிக்க நீர் மோர் பந்தல் திறப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு கோடைக்கால நீர் மோர் பந்தலை பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா திறந்துவைத்தார்.

அப்போது அங்கு திரண்ட விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க., திராவிடர் கழகம் ஆகிய கட்சியினர் சார்பில் ஹெச்.ராஜாவுக்கு கறுப்பு கொடி காட்டப்பட்டது. இதனால் டென்சனான பா.ஜ.க-வினர் கறுப்புக்கொடி காட்டியவர்களைக் கைது செய்யக் கோரி கோஷமிட்டனர். அத்துடன்  ஹெச்.ராஜா முன்னிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உருவபொம்மை எரிக்கப்பட்டது. அதனைத் தடுக்க முயற்சி செய்த போலீஸார் - பா.ஜ.கவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

முன்னதாக,பா.ஜ.கவினருக்கும் மற்ற எதிர்கட்சி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,இலுப்பூர் டி.எஸ்.பி. கோபாலச்சந்திரன், பொன்னமராவதி டி.எஸ்.பி. தமிழ்மாறன், காவல் ஆய்வாளர் கருணாகரன், உதவி ஆய்வாளர்கள் முத்துக்கருப்பன், பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமான போலீஸார் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தண்ணீர் பந்தலை திறந்துவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா,"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். முதலில் 4 மாநிலங்களும் தங்கள் சார்பாக 4 பிரதிநிதிகளை நியமிக்கட்டும். மீததமுள்ள 5 பேரை நாங்கள் நியமனம் செய்து கொடுக்கிறோம். அப்படி செய்தாலும் இல்லை..இல்லை.. மாநில அரசு விவகாரத்தில்  அதன் உரிமையை மத்திய அரசு தட்டி பறிக்கிறது என்று  சொல்வீர்கள்.

வைகோ, தி.மு.கவை விட்டுட்சென்ற போது 8 பேர் தீக்குளித்தார்கள். அதை மறந்து தி.மு.கவுடன் இன்று வைகோ கைகோத்து கொண்டு இருக்கிறார். தீக்குளித்தவர்களுக்கு துரோகம் செய்துவிட்டார் வைகோ. பெரியார், பட்டியலின மக்களின் விரோதி. தி.மு.க. இனி எந்த காலத்திலும் தமிழ்நாடாடில் ஆட்சி அமைக்க முடியாது. இதுதெரிந்துதான் கருணாநிதி, ஸ்டாலினை தி.மு.கவின் தலைவராக்கவில்லை" என்றார்.