செல்லூர் ராஜூவைப் புறக்கணித்து மதுரையில் முதலமைச்சர் விழா?

மதுரை அதிமுகவில் அமைச்சர்கள்  செல்லூர் ராஜூவுக்கும், ஆர்.பி.உதயகுமாருக்கும் இடையே கடுமையான கோஷ்டி அரசியல் நடந்து வருவது தெரியும். தற்போது அந்த விவகாரம், நாளை மதுரையில்  முதலமைச்சர் கலந்து கொள்ளும் விழாவில் செல்லூர் ராஜூவைப் புறக்கணிக்கும் வகையில் வளர்ந்து வருகிறது.

செல்லூர் ராஜூ இல்லாமல் ஆலோசனை

சமீபத்தில் செல்லூர் ராஜூவின்  ஆதரவாளரான கிரம்மர் சுரேஷுக்கு ஜெயலலிதா பேரவையின் மாவட்ட செயலாளர் பதவி அறிவிக்கப்பட்டது. அந்த பதவியிலிருந்து ஒரு நாளில் விடுவிக்க செய்தார் உதயகுமார். இது மாவட்டத்தில் கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கட்சியில் சீனியரான செல்லூர் ராஜூவை விட, உதயகுமாருக்கே எடப்படியும், ஓ.பி.எஸ்ஸும் முன்னுரிமை தருவதை பார்த்து செல்லூர் ராஜுவின் ஆதரவாளர்கள் நொந்து போயினர்.

இந்தசூழலில், நத்தம் ஒன்றிய செயலாளரின் குடும்ப விழாவில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமியும், ஓ.பி.எஸ்ஸும் நாளை மதுரை வரவுள்ளனர். அவர்களை வைத்து கலெக்டர் அலுவகத்துக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழாவை தொடங்கி வைக்க உள்ளதாக நேற்று மாலை திடீரென அறிவித்தார் ஆர்.பி.உதயகுமார். அறிவித்தவுடன் நில்லாமல், கலெக்டர் அலுவலக வளாகத்தில் பிரமாண்டமாக விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை அவர் தொடங்கிவிட்டார். இதைப்பற்றி மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக இருக்கும் செல்லூர் ராஜூவிடம் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

மேலும், நடைபெறவுள்ள விழா செல்லூர் ராஜூ செயலாளராக பொறுப்பு வகிக்கும் மாநகர லிமிட்டில் வருகிறது. ஆனால், புறநகர் மாவட்ட செயலாளரான ராஜன்செல்லப்பா, மற்ற எம்.எல்.ஏக்களுடன் இணைந்துகொண்டு இந்த நிகழ்ச்சிக்கான வேலைகளை செய்து வருகிறார் உதயகுமார். இன்று காலை, விழா ஏற்பாடுகளை பார்வையிட கலெக்டருடன் உதயகுமார் சென்றார். உள்ளூரில் இருந்தும் செல்லூர் ராஜூ அழைக்கப்படவில்லை. இன்று மாலை மதுரை வந்த ஓ.பி.எஸ்ஸை வரவேற்கவும் செல்லூர்ராஜு வரவில்லை. இந்த விவகாரங்களால் அவர் ரொம்பவும் அப்செட்டாகி விட்டாராம். இவர்களின் கோஷ்டிப் பூசல் உச்சமடைந்து வரும் நிலையில், நாளை நடைபெறும் முதலமைச்சரின் விழாவில் செல்லூர் ராஜூவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!