வெளியிடப்பட்ட நேரம்: 02:38 (15/04/2018)

கடைசி தொடர்பு:02:38 (15/04/2018)

தமிழ்ப் புத்தாண்டு தின சிறப்பு - பழ அலங்காரத்தில் காட்சியளித்த வெட்டுடையார் காளியம்மன்!

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பழங்கள் சூழ பக்தர்களுக்கு காட்சியளித்த  ராமநாதபுரம் அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன். இதையொட்டி பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பழங்கள் அலங்காரத்தில்  ராமநாதபுரம் அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதேபோல் ராமநாதபுரத்தில் பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.


ஹேவிளம்பி வருடம் முடிந்து ஸ்ரீவிளம்பி வருடம் ஆரம்பமான தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அருள்மிகு முத்தால பரமேசுவரி அம்பாள் கோயிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு நகரில் 14 இடங்களில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தனித்தனியாக தட்டுகளில் பூக்களை நிரப்பி பார்வைக்கு வைத்திருந்தனர். பின்னர் அவற்றை மேளதாளங்களுடன் வரிசையாக ஆலயத்துக்கு எடுத்து வந்ததையடுத்து அம்மனுக்கு பூக்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன. விழாவில் கோயில் நிர்வாக அறங்காவலர் எஸ்.ஜெயக்குமார், ராமநாதபுரம் ஆயிரவைசிய மகாஜன சபையின் தலைவர் பா.மோகன் மற்றும் பூச்சொரிதல் விழாக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் அருள்மிகு ஆதிரெத்தினேசுவரர் ஆலயத்தில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஆலய வளாகத்தில் உள்ள ஸ்ரீஐயப்பசுவாமிக்கு விசுக்கனி தரிசனம் நடந்தது. ராமநாதரம் அருள்மிகு தர்மதாவள விநயாகர் ஆலய அலங்கார மண்டபத்தில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு வருட பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சியும், அதனையடுத்து மதுரை சப்தஸ்வரங்கள் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. ராமநாதபுரம் அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் மூலவருக்கு மலர்களாலும், பழங்களாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன. ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாதசுவாமி திருக்கோயிலிலும், அருள்மிகு வழிவிடு முருகன் திருக்கோயிலிலும் மூலவர்கள் சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.