`காவிரி போராட்டத்தை தீவிரப்படுத்துவேன்' - வைகோ ஆவேசம்!

"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்காக தீக்குளித்து உயிரிழந்த சரவணன் சுரேஷின் எண்ணத்திற்காக போராட்டத்தினைத் தீவிரப்படுத்துவேன்" என  கோவில்பட்டி அருகில் உள்ள  பெருமாள்பட்டியில் வைகோ தெரிவித்துள்ளார். 

விருதுநகரில் வசித்து வந்த வைகோவின்  மைத்துனர் மகன் சரவண சுரேஷ், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீடீரென உடலின் மீது, பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தார். 90 சதவிகிதத்துக்கும் மேல் தீக்காயத்துடன்  மோசமான நிலையில் மதுரை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சரவணசுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள பெருமாள்பட்டியில் அடக்கம் செய்ய கொண்டு வரப்பட்டது.

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆம்புலன்ஸில் பயணித்து வந்து அஞ்சலி செலுத்தினார். அத்துடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ-வுமான கீதாஜீவன் அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து சரவணசுரேஷின் உடல், ஊர்வலமாக மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது. அவரது உடல் மீது வைகோ, கட்சிக் கொடியைப் போர்த்தினார். 

இதனை தொடர்ந்து அங்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய வைகோ, "நியூட்ரினே திட்டத்தினை எதிர்த்து சிவகாசி ரவி தீக்குளித்து இறந்தது எனக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் இருந்து மீள்வதற்குள் தற்போது என் மருமகன் சரவணன் சுரேஷ், தீக்குளித்து இறந்தது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "தொண்டர்கள் தான் தீக்குளிக்கின்றனர், தலைவர்கள் தீக்குளிப்பதில்லை" என, செய்தித்தாள்களில் கிண்டலாக விமர்சனம் வருகிறது. இன்று பொதுப்பிரச்னைக்காக என் வீட்டில் ஒருவர் தீக்குளித்து உயிர்துறந்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஜி.எஸ்.டி வரியைக் குறைக்க வேண்டும் என்ற 3 கோரிக்கைகளை வலியுறுத்தி உயிர்துறந்துள்ளார். சரவணன் எதற்காக தன் உயிரை இழந்தாரோ, அதனை நிறைவேற்ற எனது போராட்டத்தினை நிச்சயம் தீவிரப்படுத்துவேன்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!