`திருவிழாவின் போது சகதியில் சிக்கிய கோயில் தேர்' - ஜே.சி.பி மூலம் மீட்பு!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில், சித்திரைத் தேரோட்டதின் போது ரத வீதிகளில் சகதியில் சிக்கிய கோயில் தேர், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் இழுத்து மீட்கப்பட்டது. 

தேரோட்டம்

துாத்துக்குடி மாவட்டம், கயத்தாறில், 100 ஆண்டுகள் பழமையான அகிலாண்டேஸ்வரி அம்பாள்  கோவில்  உள்ளது. இந்த கோவிலில்  கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில், சித்திரைப் பெருந்திருவிழாவும் ஒன்று.  ஆண்டு தோறும் நடைபெறும் இந்த விழாவில் இவ்வாண்டுக்கான விழா, 6-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 11 நாட்கள்  நடைபெறும்  இந்த விழாவின் முக்கிய நிகழ்வான, சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு, சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நடைபெற்ற, சிறப்பு பூஜைகளுக்கு பின், தேரில், சுவாமியும் அம்பாளும் எழுந்தருளினர்.  தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, பக்கதர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். 

தென் மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கரிசல் மண் சூழ்ந்த கயத்தாறு பகுதியில் பெய்த மழையால் பாதைகள் தண்ணீர் சூழ்ந்து களிமண் சகதி போல இருந்தன.  இதனால், பக்தர்கள் வடம்பிடித்து இழுத்த தேர், சில அடி துாரத்தில், பாதையில் தேங்கி இருந்த களிமண் சகதியில் சிக்கியது. பக்தர்கள் எவ்வளவு இழுத்தும் தேர் அசையாததால், ஜே.சி.பி., இயந்திரம்  கொண்டுவரப்பட்டு, தேருக்கு முன் இருந்த களிமண் சகதிகள் அகற்றப்பட்டன. பின் இயந்திரம் மூலம் தேர் இழுக்கப்பட்டு, நிலையத்தை அடைந்தது.  இந்த தேர்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ரத விதியில் மண்சாலைக்கு பதிலாக, தார் சாலை அமைத்திருந்தால், இந்த விபரீதம் நடந்திருக்காது. எனவே, ரத வீதிகளில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என பக்தர்கள்  வேண்டுகோள் விடுத்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!