வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (15/04/2018)

கடைசி தொடர்பு:04:30 (15/04/2018)

22 கி.மீ ஆறு... 10 ஆயிரம் பேர்... தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க கூடிய மக்கள்!

திருவனந்தபுரத்தில் கோடைகாலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதை தடுக்கும் விதமாக 10 ஆயிரம் பொதுமக்கள் இணைந்து 22 கி.மீ. ஆற்றை சுத்தப்படுத்தினர்.

திருவனந்தபுரத்தில் கோடைகாலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதை தடுக்கும் விதமாக 10 ஆயிரம் பொதுமக்கள் இணைந்து 22 கி.மீ. ஆற்றை சுத்தப்படுத்தினர்.

ஆற்றை சுத்தப்படுத்திய மக்கள்

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தைபுரத்தில் அமைந்துள்ளது கிள்ளியாறு. இந்த ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகள், டயர்கள் என குப்பைகள் நிறைந்து சாக்கடையாக காட்சியளித்தது. இந்த ஆற்றில் தண்ணீர் இல்லாததால் கடந்த ஆண்டு கோடையின்போது நெய்யாறு அணையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இதனால் விழித்துக்கொண்ட பொதுமக்களும், அரசியல்வாதிகளும் ஆற்றறை சுத்தப்படுத்தி தண்ணீர் தேக்க முடிவு செய்தனர். இதையடுத்து ஆறு தொடங்கும் கருஞ்சாத்திமூலையிலிருந்து வழையில பாலம் வரை 22 கி.மீ. பகுதியை சுத்தப்படுத்தப்படுத்தி தடுப்பணைகள் கட்ட முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு நீர்வளத்துறை அமைச்சர் மேத்யூ டி.தாமஸ் தலைமையில் ஆற்றை அறிந்துகொள்ளும் நடைபயணம் நடந்தது. 31 கால்வாய்கள், 50 வாய்க்கால்களை உள்ளடக்கிய இந்த ஆற்றை இன்று காலை முதல் மதியம் வரை 10 ஆயிரம் பேர் சேர்ந்து சுத்தம் செய்தனர்.

ஆற்றை அறிந்துகொள்ளும் நடைபயணம்

மகாத்மா காந்தி மற்றும் ஐய்யங்காளி வேலை உறுதிதிட்ட தொழிலாளர்கள், அரசியல் கலாச்சார அமைப்பினர், குடியிருப்போர் நலச்சங்கங்கள், பசுமை சேனா உள்ளிட்ட அமைப்பினர் சுத்தப்படுத்தும் பணியை செய்தனர். இதில் கேரள நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் எம்.எல்.ஏ. க்கள் கலந்துகொண்டனர். இந்த மாதத்துக்குள் ஆற்றில் தடுப்பணைகள் கட்டி, வரும் ஜூன் மாதம் பெய்யும் பருவ மழையை ஆற்றில் தேக்குவது என அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே மழைகாலத்தில் மட்டும் இந்த ஆற்றில் தண்ணீர் ஓடிவந்த நிலையில் தடுப்பணை அமைப்பதன் மூலம் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. இதன்மூலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நிலத்தடி நீரை உயர்த்துவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. இதுபோன்று தமிழக ஆறுகளையும் சுத்தப்படுத்தி தண்ணீர் தேக்கினால் பிற மாநிலங்களிடம் கையேந்தும் நிலை மாறும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.